Tuesday, June 7, 2011

கல்லறைகள் திறந்து கொண்டன; மடிந்தவர்கள் வருகிறார்கள்-பெல்ஜியத்தில் வைகோ பேச்சு!

சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? செர்பியாவில் 8000 பேரை படுகொலை செய்தான் என்று போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே?. அதே வரிசையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை கூண்டில் ஏற்றக் கூடாதா என்று பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் நேற்று நடந்தது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி தொடக்க உரை ஆற்றினார்.

இடதுசாரி பசுமை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார்.

இந்த அமர்வில் ஒவ்வொருவரும் பேச தலா 5 நிமிடங்கள், அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வைகோவுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்குத் தன் உரையைத் தொடங்கிய வைகோ 18 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப உரையாற்றினார்.

வைகோ உரை விவரம்:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து நான் வந்திருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும், ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

எங்கள் ஈழத் தமிழ் மக்களின் விம்மலும், அழுகைக்குரலும், மனித குலத்தின் மனசாட்சியை, அனைத்து உலக நாடுகளின் இதயக் கதவுகளை, நிச்சயமாகத் திறக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் பேசுகிறேன். பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்?.

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்ஸல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.

ஈழத் தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத் தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், 2009 மார்ச் 12ம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நாவின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது. இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலையில், அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பட்டாக் கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்தபோது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது. தமிழ்ப்பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நார்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?.

அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா?. ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழு சொல்லிவிட்டது.

ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், பின்னர் 1796ல் பிரிட்டன் படைகள் வந்தன. நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

1948 பிப்ரவரி 4ல் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத் தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1957ல் பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், 1965ல் சேனநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14ம் நாள் வட்டுக்கோட்டையில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

1977 பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று. ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. 1983ல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும், சுய நிர்ணய உரிமையையும், சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர்முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 டிசம்பர் 24ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில், 2006 ஆகஸ்ட் 8ம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக் குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ல் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.

இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை, கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன. அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என தற்போது ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படுகொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன், ராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது?.

அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு, ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இங்கே, பால் மர்பி அவர்கள் பேசும்போது, வட அயர்லாந்தில் குண்டுகளை வீசினார்கள், ஆயுதங்களால் தாக்கினார்கள், ஆயினும் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

அயர்லாந்து விடுதலைப் போராட்ட வரலாற்றை என் கல்லூரி நாள்களில் படித்து உணர்வு பெற்றவன் நான். வட அயர்லாந்திலே நடைபெற்ற ஐரிஷ் விடுதலை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடிப்படையில் வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அங்கே இங்கிலாந்து அரசு, இனக்கொலை செய்யவில்லை. ஆனால், சிங்கள அரசு தமிழ் இனக்கொலை நடத்தியது.

பிரபாகரன் அவர்கள் முப்படைகளை உருவாக்கினார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து, யுத்தக் களத்தில் நின்றார். ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரவலாற்றுக் கட்டாயமாயிற்று.

இந்த அரங்கத்தில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். ஒரேயொரு கேள்வி. யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப் புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கொடியவன் ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னதில்லையே?. அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிருபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?. இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள ராணுவத்தினர் கொன்றார்களோ? அத்தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கொடூரமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நாவின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், நேற்றைய தினம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.

கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?.

ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள ராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

என் உரையை முடிக்கும்போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.

கல்லறைகள் திறந்து கொண்டன
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்

இவ்வாறு வைகோ உரையாற்றினார்.

Friday, April 29, 2011

ஈழப் போர்க் குற்றவாளி இராஜபக்சே!

அண்மைக்கால வரலாற்றில் ஆசியாக் கண்டத்தில் மிகப் பெரும் உயிர்ப்பலி நேர்ந்ததற்கு சிங்கள இன வெறியன் இராஜபக்சே தான் காரணம். இது, அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயத்தின்’ (Permanent People’s Tribunal) பத்து நீதிபதிகள் தந்த தீர்ப்பு - (அ) இராஜபக்சே, ஒரு போர்க்குற்றவாளி, (ஆ) இராஜபக்சே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தது உண்மை - இந்த இரண்டு திருப்புமுனைத் தீர்ப்புகளை அமெரிக்கா, அர்ஜென்டினா, பெல்ஜியம், அயர்லாந்து, இத்தாலி, எகிப்து, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கி உள்ளனர்.

இது, பன்னாட்டு அளவில் இன்றியமையாத ஒரு தீர்ப்பாயம் தந்த தீர்ப்பு! மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு மாமன்றத்தின் தீர்ப்பு!

பன்னாட்டு மக்கள் உரிமைப் பிரகடனத்தால் உந்துதல் பெற்று, திபெத் - மேற்கு சகாரா - அர்ஜென்டீனா - எரித்திரியா - பிலிப்பைன்ஸ் - எல்சால்வடார் - ஆப்கானிஸ்தான் - கிழக்குத்திமோர் - கவுதமாலா - அர்மீனியா - நிகரகுவா முதலிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு உரிமை மீறல்களைத் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இதற்கு இல்லாவிட்டாலும், அவை மிகுந்த நம்பகத்தன்மை உடையவையாக உலகமெங்கும் மதிக்கப்படுகின்றன. இத்தீர்ப்புகள் தன்மையான பன்னாட்டு அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தீர்ப்புகளில் பல ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுவினால் விவாதிக்கப்படுகின்றன. அதன் விளைவாகப் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. எரித்திரியாவின் விடுதலைப் போராட்டம், பிலிப்பைன்ஸ் நாட்டின் சர்வாதிகாரி மார்கோசிற்கு எதிரான கண்டனம் போன்றவை இத் தீர்ப்பாயத்தின் முன்னால் வந்த சில அண்மைக்கால நிகழ்வுகளாகும். சிக்கலின் வேர்களைக் கண்டறிவதோடு நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதும், தனி ஒருவர் அல்லது குழுவினரது பொறுப்புகளை உணர்த்துவதும் அல்லாமல், சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளின் கட்டமைப்புக் காரணங்களையும் சுட்டிக் காட்டுவது இத்தீர்ப்பாயத்தின் தலையாய சிறப்பாகும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பிறகு, இத்தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் 2010ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை, இத்தீர்ப்பாயம் விவாதிக்க வேண்டுமென, ‘இலங்கையின் அமைதிக்கான ஐரிஷ் கருத்து மன்றம்’ எனும் அமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு 2007 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. மனித உரிமை மற்றும் அமைதிக்காகத் தொண்டாற்றி வரும் மனித உரிமைக் குழுவினர், கலைஞர்கள், அயர்லாந்திலிருக்கும் கல்வியாளர்கள் ஆகியோர் இலங்கையில் மனித உரிமைகள், சனநாயகம் குறித்துக் கலந்துரையாடலுக்கு உதவும் பொருட்டு இவ்வமைப்பை உருவாக்கினர்.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால், அத்தீர்மானத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கோரப்பட்டிருந்தது. பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

இன்றைய புவிசார் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மீது அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் கேட்க, அரசாங்கங்களை நம்பிப் பயனில்லை. அவை தங்களது எதிர்கால இலாபத்தை முன்வைத்தே பன்னாட்டு நிலைப்பாடுகளை எடுக்கின்றன. ஆகவே, உலகெங்குமுள்ள புரட்சியாளர்கள், சனநாயக ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள், தேசிய இன விடுதலைப் போராளிகள், மனச்சான்றுள்ள மக்கள் சமூகத்தினர் ஆகியோரது ஆதரவைத் திரட்டுவதுதான் இன்றைய நிலையில் ஏற்புடையதாக இருக்கும்.

“மூலதனம் உலகமயமாவதால், புரட்சியும் உலகமயமாக வேண்டியது கட்டாயம்” எனச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். “செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உடையவர்களுக்கு, அதைச் சார்ந்து செயலாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது” என்றார் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன்.

மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான உலகளாவிய “லெலியோபாசோ” அமைப்பினால், ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் “நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்”, இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் 1979ஆம் ஆண்டு சூன் மாதம் 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்ற 5 பேர் உட்பட, பிற பன்னாட்டு சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் இன்றுவரை, ஏறத்தாழ 40 விசாரணைகளை ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’ மேற்கொண்டுள்ளது. இலங்கையில், “அமைதிப் பேச்சு வார்த்தைகள் முறிந்துபோன பிறகு நடைபெற்ற இறுதிக் கட்டப்போர், குறிப்பாக இறுதி மாதங்கள்” பற்றி விசாரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு விசாரணையை - ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’ மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்த ஆவணங்கள், 2009ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயத்தின்’ விசாரணை, டிரினிடி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது.

2006ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் 2009 ஏப்ரல் மாதம் வரை, அய்க்கிய நாடுகள் அவையில் உள்ள ஆவணங்களில் வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டதாக அந்த அய்ரிஷ் குழு கூறியது. இறுதி சில வாரங்களில் மட்டும் 20,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

போர் குறித்த ஜெனிவா ஒப்பந்தங்களை இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மீறியதாகவும், குறிப்பாகப் போரின் இறுதி அய்ந்து மாதங்களான 2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கொடுமையான போர்க் குற்றங்களையும் அவர்கள் புரிந்ததாகவும் பல குற்றச்சாற்றுகள் முன் வைக்கப்பட்டன.

மக்களின் வாழ்விடங்கள், மருத்துவமனைகள், அரசு அறிவித்த ‘பாதுகாப்பு வளையங்கள்’, ‘பாதுகாப்புப் படையினர்’ அறிவித்த ‘தாக்குதல் அற்ற வளையங்கள்’, ஆகியவற்றின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும், அவற்றின் மூலம் பல மக்களும், மருத்துவர்களும், தொண்டு நிறுவன ஊழியர்களும், கொல்லப்பட்டதும் இந்தக் குற்றச்சாற்றுகளில் அடங்கும். போர்ப் பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாததும் இம்முறையீடுகளில் அடங்கும். இவற்றைத் தவிர, மானிடத்திற்கு எதிரான கொடிய குற்றங்களும் அதில் சேரும்.

போர் முடிந்த பின்னர், வன்னிப்பகுதித் தடுப்பு முகாம்களில் 2 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் திரும்பியது; முகாம்களில் நெருக்கமாக அடைக்கப்பட்டனர். பாதுகாப்பான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் நலவாழ்வு வசதிகள் இன்றி, அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

முகாம்களிலிருந்து பல நூறு எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதும், பாதுகாப்புப் படையினர் அல்லது அரசின் ஆதரவு பெற்ற குழுக்களால் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டதும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உள்ளூர் மக்களிடமிருந்து உண்மைகளை வெளிக் கொணரும் வாய்ப்பினை அளிக்க, எந்தத் தேசிய அல்லது பன்னாட்டு ஊடகங்களுக்கோ, பிற செய்தி நிறுவனங்களுக்கோ, அய்.நா.அமைப்பினருக்கோ அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

இக்குற்றங்களுக்காகக் கீழ்க்குறித்த வினாக்களுக்குப் பதில் கூறும்படி இலங்கை அரசு மீது வினா தொடுக்கப்பட்டது :-

1. உலகளாவிய குற்றவியல் நீதிமன்றத்தின் ‘ரோம்’ சட்டத்தில், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என விளக்கப்பட்டுள்ள முறையில், திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்றனவா?

2. ‘ரோம்’ சட்டத்தின் மானுடத்திற்கு எதிரான குற்றங்களில், தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்வியல் நிலைகளில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டனவா?

3. தாமாகவே முன் வந்து இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போர்க் கைதிகளைக் கொலை செய்ததன் மூலம், இலங்கை அரசு படைகள் உலகளாவிய போர்ச் சட்டங்களை மீறியிருக்கின்றனவா?

4. பாலியல் வன் கொடுமைகளும், வன்புணர்வும் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டனவா?

5. ‘வலுக்கட்டாயமாக ஆள்களைக் காணமல் அடிப்பது’ குறித்த ரோம் சட்டத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனரா? காணாமல் ஆக்கப் பட்டனரா?

6. உலகளாவிய சட்டங்களுக்கு முரணாகத் தமிழ் மக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனரா?

7. மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில் கனரக ஆய்தங்களையும் வானூர்தித் தாக்குதல்களையும் மேற் கொண்டதன் மூலம் - இலங்கை ஆய்தப்படையினர் போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளனரா?

8. உலகளாவிய சட்டங்களால் தடை செய்யப்பட்டுள்ள ஆய்தங்களைக் கொத்துக் குண்டுகள், வேதியத் தன்மையுள்ள குண்டுகள் போன்ற வற்றை இலங்கைப் படையினர் பயன்படுத்தினரா?

9. இறந்து போனவர்களின் உடல்களைச் சேதப்படுத்துவதன் மூலம், போர்க் குற்றங்களை இலங்கை அரசு படைகள் புரிந்தனவா?

முதலிய குற்றஞ்சார் வினாக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்தக் கூடிய எந்த நேர்மையான முன்னேற்றத்தையும் தடுக்கத், தீவிரச் சிங்களத் தேசியவாதிகள் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த உள்நாட்டுப் போர் ‘சான்றுகளற்ற போர்’ என்பது ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயத்தின்’ முன் வைக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்கள் சார்பாளர்கள், வல்லுநர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவிய லாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்கு மூலங்களைத் தீர்ப்பாயம் கேட்டறிந்தது.

இலங்கை அரசு எந்தவொரு தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் செல்ல இசையவில்லை. உண்மையில் தொடக்கக் காலத்தில் இறந்தவர்கள் ஊடகவியலாளர்களே! இது உள் நாட்டுப் போர் அல்ல: இன அழிப்பைச் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை: இனப் படுகொலை! போர் வானூர்திகள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாகச் சான்றுகள் உள்ளன. ‘நாபாம்’ குண்டுகள் போடப்பட்டன. வேறு பல எரியும் தன்மையுள்ள பொருட்களும் போரில் பயன்படுத்தப்பட்டன. பொது நலன் சார்ந்த பொதுக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. பெண்களும், குழந்தைகளும் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனைகள், பள்ளிகள் முதலிய பொதுக் கட்டமைப்பு உட்படப் பொதுமக்கள்வாழ்விடங்களில் அவற்றுள் இலங்கை இராணுவம் தொடர்ந்து எறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. குடிநீர் வழங்காமை, மருத்துவஉதவி அளிக்காமை, தொடர்ந்து கல்வி பெற வசதி கிடைக்காத தன்மை முதலியவற்றால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் மக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன. சட்டமுரணான ஆய்தங்களைப் பயன்படுத்தியோ, பயன்படுத்தாமலோ, தமிழ்மக்களை அழித்தொழிக்க முயல்வது போர்க்குற்றமாகும். இலங்கைஅரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை, தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால் வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல் நலன் பாதிக்கப்பட்டு, தோல் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் கக்கல் கழிச்சலாலும் சத்துக் குறைவினாலும் இறந்தனர். ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தில் அனைத்துத் தேவைகளுக்கும் 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது.

அடிப்படை நலவாழ்வாகிய கழிப்பறைப் பயன்பாட்டுக்கும் துணி துவைப்பதற்கும் தேவையான நீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்களுக்கு உடுத்தி

யிருந்த உடை மட்டுமே இருந்தது. மாற்றுத் துணிகள் கூட வழங்கப்படவில்லை. கழிவு நீர் அகற்றப்

படாமல் தேங்கி நின்றது. அதில் குழந்தைகள் தவறி விழுந்து மூழ்கி இறந்த கொடுமையும் நிகழ்ந்தது.

தமிழ் மக்களுக்கு உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. அதன் மூலம் தமிழ் மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க முயன்றது இலங்கை அரசு. அழிக்கப்பட்ட கிராமங்களிலும், முகாம்களிலும் அரசும் இராணுவமும் தமிழ்ப் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகளும், வல்லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் தொடர்ந்து அரங்கேறிய கொடுமைகளாகும். மேலும், இது கருக்கலைப்பு, குடும்பப் பெருமைக்கு இழுக்கு. அவமானம் மற்றும் மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்ட கொடுமைகளும் நிகழ்ந்தன.

தமிழ்த் தலைவர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்தது மற்றும் ஒரு கொடுமையாகும். இலங்கை இராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் ராஜசிங்கம், நடராசா ரவிராஜ் மற்றும் டி.மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை ஆய்தப் படைகள் ஆகியவை ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8-கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ‘போர்க்குற்றங்கள்’ புரிந்துள்ளதைத் தெளிவாக்குகின்றன.

‘ரோம்’ சட்டத்தின் பிரிவு 8-கீழ் வருமாறு கூறுகிறது :-

நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையிலான போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது, கீழ்க்காணும் செயல்களை உள்ளடக்கும்.

1. பொதுமக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடு படாத தனி மாந்தர் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள்.

2. இராணுவ இலக்கல்லாத பொதுக் கட்டமைப்புகள்மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது.

3. தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி அதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய இராணுவ இலாபத்தைவிட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொதுமக்களுக்குக் காயம் ஏற்படுத்துவது, பொதுக் கட்டமைப்புகள், பொதுமக்கள் உடைமைகள் ஆகியவற்றைப் பரவலாகச் சேதப்படுத்துவது, இயற்கைச் சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரியப் பாதிப்பினை ஏற்படுத்துவது ஆகியவை.

4. ஆய்தங்களைக் கைவிட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல்லது தாமாக முன் வந்து சரணடைந்த ஒருவரைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது.

5. மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டடங்கள் - வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த கட்டடங்கள் - மருத்துவமனைகள் - இராணுவ இலக்காக அல்லாததும் - காயம்பட்டவர்களோ, நோய்வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக்கூடியதுமான இடங்கள் ஆகியவை மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்.

6. சுயமரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்துவது அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது.

7. வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (F) ல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாயக் கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் முதலியவைகளும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.

மேலும், ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடர் உதவிப் பொருள்களை மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வது உட்பட, பொது மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வதும் குற்றமாகும். பணயக் கைதிகளைப் பிடித்து வைத்தல் - நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்றத்தால், அளிக்கப்பட்ட ஒரு முன்னோடித் தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள் - கொலை - படுகொலை செய்தல், மக்களைக் கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல், மக்களைத் துன்புறுத்துதல் - வலுக்கட்டாயமாகக் காணாமல் அடித்தல் - ஒரு தேசிய இனம் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை அழித்தல் ஆகியனவும் போர்க்குற்றங்களாகப் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கே, பன்னாட்டுச் சமூகம், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல் களைத் தடுக்க, எவ்விதமான நடவடிக்கை களையும் மேற்கொள்ள வில்லை. இலங்கை அரசின் தொடர்ச்சியான போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் அது புறந்தள்ளி விட்டது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாமல் விட்ட அய்க்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளுக்கு, ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம்’ அந்தப் பொறுப்பினை உணர்த்துகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோசமான, கொடுமையான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக அய்.நா.மனித உரிமைகள் ஆணையமும், அய்.நா.பாதுகாப்பு ஆணையமும் இலங்கைத் தமிழர்கள் மீதான அனைத்து விதமான மனித உரிமை மீறல்களுக்கும் போர் நடவடிக்கைகளுக்கும் அரசியல் ஏற்பு அளிக்கப்பட்டது மாபெரும் தவறு. இதற்கான முழுப் பொறுப்பும், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை’ நடத்துவதாகக் கூறும் அமெரிக்காவையும் அதன் தலைமையிலான நாடுகளையுமே சாரும் என ‘நிலைத்த மக்கள் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் தீர்ப்பாயம்’ சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் பல நாடுகளுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதையும் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. சில நாடுகள், போர் நிறுத்தக் காலகட்டத்தில் இலங்கை இராணுவப் படையினருக்குப் பயிற்சியும் அளித்துள்ள. இவ்வாறான, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பரிந்துரைகள் ஏற்கப்படுமானால் ஈழத்தின் போர்க் குற்றவாளி இராஜபக்சே தான் எனத் தெளிவாகும்!

மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் விசாரணை செய்திட சுதந்திரமான அதிகாரமுடைய ‘உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்’ ஒன்றை அமைத்து, அக்குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இலங்கை அரசு உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்ள வேண்டும். 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை சுதந்தரத்தையும், அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.

பனிரெண்டாயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும், கௌரவத்தையும் உறுதி செய்து, உலக நடைமுறைகளின்படி, அவர்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்திக்கவும், சட்டப் பூர்வமாகத் தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அனைத்துத் துணை இராணுவக் குழுக்களையும் உடனடியாகக் கலைத்திட வேண்டும். தமிழர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும்.

தமிழர்கள் சுதந்தரமாகச் செயல்பட சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்கிட வேண்டும்.

இலங்கை அரசு ‘ரோம்’ ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முகாம்களில் உள்ள தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரைப் பொறுத்த அளவில் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ கீழ்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.

(அ) அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைக் காப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், மனிதநேய அமைப்புகள் - சுதந்தரமாகவும், தடையின்றியும் முகாம்களுக்குச் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.

(ஆ) முகாம்களை இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடனும், பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிர்வாகத்தில் தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

(இ) அய்.நா.வின் “உள்நாட்டில் இடம் பெயர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்” போன்றவற்றில் கூறப்பட்டுள்ள தரத்தில் - பாதுகாப்பாகத் திரும்பவும், திரும்புகிறவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறு கட்டமைப்புச் செயல்களைச் சுதந்தரமான பன்னாட்டுக் கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.

(ஈ) பாதிப்புக் குறித்த மதிப்பீடு, மனித ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்துச் சரியான மதிப்பீட்டிற்குப்பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.

(உ) பெண்கள், குழந்தைகள், பிரிந்து விட்ட குடும்பங்கள், அடிப்படைச் சேவைகள் சென்றடைதல், போருக்குப்பின்னான புனர் மருத்துவம் மற்றும் மன அழுத்தம் மனப்பிறழ்வுக்கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் முதலியவற்றைக் கவனிக்க வேண்டும்.

(ஊ) போர்க்குற்றங்கள், மனித உரிமைச்சட்ட மீறல்கள் குறித்து விசாரித்து அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்திட அய்.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

(எ) தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள், சுதந்தரம் மற்றும் சட்டம் ஒழுங்கு முதலியவற்றை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திரமாகக் கண்காணிக்க அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இவையே, அவசரமாகவும், அவசியமாகவும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும்!

Courtesy-Keetru.

வரலாற்றுப் பிழையை திருத்துமா இந்தியா?

2009-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஈழப்படுகொலைகளுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்கள் கொடுங்கனவுகளைத் தரும் மாதங்களாக மாறிப் போய்விட்டன. மனிதாபிமானம் கொண்ட, ஈர மனம் கொண்ட எவரது நினைவுகளும் அந்த ரத்தத்தில் தோய்ந்துதான் போயிருக்கும். ஈழத்து மகளிரும், குழந்தைகளும், பதுங்கு குழிகளும்தான் கனவுகளின் உருவங்கள்.

ஈழத்துப்போரில் இந்தியா நடந்து கொண்ட விதமும், மனிதாபிமானமற்ற முறையில் அமைதி காத்த விதமும் நமக்கு எரிச்சலை மட்டுமல்ல, கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. அசோகரின் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியை ஏற்றவோ, கொண்டாடவோ நமது ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும், அருகதையும் கிடையாது. பிரபாகரனை பழிவாங்குகிறேன் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு இந்தியா அனுமதியளித்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் சமீபத்தில் அம்பலப்படுத்தியது.

ஜனவரி 2009-ல் பிரணாப் முகர்ஜியின் திடீர் இலங்கைப் பயணத்திற்குப் பின்னர் அவர் அளித்த பேட்டியொன்றில், “இலங்கை அடையப்போகும் இராணுவ வெற்றி 23 வருடங்களாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்குப் பகுதி மக்களுக்கு நிம்மதியான, அமைதியான வாழ்வைத் தரும். தனது நோக்கமும் இதுதான் என ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார். அத்தகைய நிம்மதியான, அமைதியான வாழ்வை வடக்கு பகுதி மக்கள் பெற்றுள்ளார்களா? என்பதை பிரணாப் முகர்ஜி தன் மனசாட்சியைப் பார்த்து கேட்டுக் கொள்ளட்டும்.

“இந்தப் போரில் ஐ.நா. எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது. விடுதலை புலிகளுடனும் தற்போதைக்கு பேச்சு வார்த்தை கிடையாது. போர் நிறுத்தமும் கிடையாது என இலங்கை அரசு தெளிவாகக் கூறிவிட்டது” என வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரி பீட்டரிடம் ஏப்ரல் 15, 2009 அன்று தெரிவித்திருக்கிறார். அதாவது இலங்கை அரசின் படுகொலைகளை மேனன் ஆமோதிக்கிறார்.

ஏப்ரல் 24 அன்று மேனனும், நாராயணனும் கொழும்புக்குச் செல்கின்றனர். டெல்லிக்கு திரும்பி வந்த பின்பு அமெரிக்கத் தூதரக அதிகாரி பீட்டரிடம் நாராயணன் கூறுகிறார்; “ ஏப்ரல் 27 அன்று மகிந்த ராஜபக்ச ஓர் அறிவிப்பு செய்வார். அதுவரை பொறுமையாக இருக்கவும்.” பிற்பகலில் அறிவிப்பு வரும் என்ற தகவலினால்தான் முதலமைச்சர் காலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தாரோ? அறிவிப்பு செய்தார் மகிந்த. போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை. மாறாக கனரக ஆயுதங்கள் உபயோகிக்க மாட்டோம் என்ற அறிவிப்பைச் செய்தார். அம்புப்படுக்கையில் வீழ்ந்துக்கிடக்கும் ஈழத்தமிழ்ப் போராளிகளையும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும் கொல்ல கனரக ஆயுதங்கள் இனிமேல் எதற்கு? என்பது மகிந்தவுக்குத் தெரியாதா என்ன? அதையும் மீறி போரின் இறுதியில் கொடும் ஆயுதங்கள் கொண்டு தமிழ் மக்களைப் படுகொலை செய்தார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் உயிர்களை பலி எடுத்தது இலங்கையின் மகிந்த அரசு. பிரணாப் முகர்ஜியும், மேனனும், நாராயணனும் மத்திய மாநில அரசுகளும் விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டமும் முடிவுக்கு வந்தது.

2009 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் போரை நிறுத்த, தாக்குதலை நிறுத்த மேற்குலக நாடுகள் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் எல்லாம் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டன. ஏனென்றால் இந்தியாவின் போரை இலங்கை நடத்தியது. இந்தியப்பிரிவினைக்குப் பிறகான மிக மோசமான இனப்படு கொலைகள் தனது அருகாமை நாடொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்க, இந்திய ஆட்சியாளர்கள் அதை ஊக்குவித்தனர். இந்திய மக்களும், தமிழக மக்களும் தொலைக்காட்சிகளில் அதை வேடிக்கைப்பார்த்தனர். தமிழ் உணர்வாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்ய தமிழக ஆட்சியாளர்கள் செய்த தந்திரங்களை உலகம் அறியும். விக்கிலீக்ஸ் தகவலின்படி தமிழ்நாட்டில் நடைபெறும் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு மட்டுமே இந்திய அரசு பயந்தது. தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எழுச்சி தோன்றியிருக்குமானால் நிலைமை தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் ஆறு கோடி தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே ஒன்றுபட மாட்டார்கள் என்பதை மத்திய அரசு நன்கு அறிந்திருந்தது. அதற்கும் மேல் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை எப்படி சரிகட்ட வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு சொல்லியா தெரிய வேண்டும்?

போர் முடிந்தவுடன், பிரபாகரன் ஒழிக்கப்பட்ட பிறகு தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்க மகிந்தவின் இசைவைப் பெற்றுவிட முடியும் என்ற இந்திய அரசின் பகற்கனவு என்ன ஆனது?

போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளைத் தர மறுக்கும் மகிந்த அரசு, இலங்கையில் மிகப்பெரும் இராணுவப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வருகிறது. சர்வாதிகாரியாக தன்னையும், தன் சந்ததிகளையும் மகிந்த வளர்த்துக் கொண்டிருக்கிறார். சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு, கிழக்கில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மறுக்கப்படுகிறது. வீடு கட்டிக்கொடுக்க இந்திய அரசு தந்த நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகக்கோப்பைப் போட்டியை ரசித்துப் பார்க்க பிரதம, ஜனாதிபதிகளுக்கு நேரமிருக்கிறது.“தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை எப்போது வழங்கப்போகிறாய்?” என்று மகிந்தவிடம் கேட்க மட்டும் நம் தலையாட்டிகளுக்கு நேரமிருப்பதில்லை. அதற்கான மனமும் இருப்பதில்லை.

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட வடு மிகப்பெரியது. அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் அதைக் குணப்படுத்த முடியாது. அப்படுகொலைகளை வெறுமனே தகவல்களாகக் கேட்ட, பார்த்த எனக்கே கொடுங்கனவுகள் வருமானால், களத்தில் மாட்டிக்கொண்ட, அலைக்கழிக்கப்பட்ட, பதுங்கு குழிகளில் வாழ்க்கையைத் தொலைத்த பல லட்சம் ஈழத்தமிழ் மக்களுக்கு அதன் நினைவுகளும், கனவுகளும் எவ்வளவு ஆழமாக இருக்கும்? ஈழப்படுகொலை காட்சிப்பதிவுகள் அடங்கியப் புத்தகம் “என்ன செய்யலாம் இதற்காக?” இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஆவணப்புத்தகம் இது. இட்லரின் வதைமுகாம் காட்சிகளை தோற்கடிக்கச் செய்யும் பல்வேறு கொடூரக் காட்சிகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நன்பர் ஒருவர் தெரிவித்தார். “இப்புத்தகத்தை பார்த்து முடிக்க எனக்கு பத்து நாட்கள் தேவைப்பட்டது. தினமும் அப்புத்தகத்தை எடுத்து ஒன்றிரண்டு பக்கங்கள் புரட்டுவதற்குள் துக்கம் தாளாமல் மூடி வைத்துவிடுவேன்” என்று மதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.செயபிரகாசம் அவர்கள் புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்னரே அதைப் பற்றி என்னிடம் தெரிவித்திருந்தார். நானும் அப்புத்தகத்தை வாங்கிவிட்டேன். கொடூரக்காட்சிகள் அச்சேறியிருக்கும் பக்கத்திலிருந்து இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. துக்கம் தாளாமல் அழுது மூடிவிடுகிறேன். இதை எழுதும் போது கூட அப்புத்தகத்தை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது.

ஈழப்போராட்டத்தின் பின்னனியில்தான் தற்போதைய லிபியக் கிளர்ச்சியையும் பார்க்க வேண்டியுள்ளது. லிபியாவின் மேற்குப்பகுதியில் கதத்பா, மாக்ரகா, வர்பல்லா என்ற பழங்குடி இனங்கள் வசிக்கிறார்கள். கிழக்குப் பகுதியில் செனூசி என்றப் பழங்குடி இனமக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 1951-ல் லிபியாவில் ஆட்சிக்கு வந்த மன்னர் இத்ரியஸ் செனூசிப்பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். 1969-ல் மன்னரை விரட்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றுகிறார் கதத்பா பழங்குடி இனத்தைச் சேர்ந்த கடாபி. அன்று முதல் அவர்தான் லிபிய சர்வாதிகாரி. மற்ற அரேபிய ஆட்சியாளர்களைப் போல் அயல்நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்றக் குற்றச்சாட்டு கடாபி மீது இல்லை. அவருடைய இராணுவ ஆட்சிமுறை, பல கட்சி ஜனநாயக முறையை அனுமதிப்பது கிடையாது. எதேச்சாதிகாரமும், ஊழலும்தான் லிபிய மக்கள் கண்ட பலன்கள். கிழக்குப் பகுதியில் செனூசிப் பழங்குடி மக்களை அவர் பல ஆண்டுகள் துன்புறுத்தியே வந்துள்ளார். மத்திய கிழக்கு கிளர்ச்சிகளின் தொடர்ச்சியாக, லிபியாவிலும் பற்றிக் கொண்ட கிளர்ச்சிக்குப் பின் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான பென்காசியை மையமாகக் கொண்ட தேசிய நிர்வாக சபையையும் கிளர்ச்சியாளர்கள் அமைத்துள்ளனர். லிபிய இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் நிர்வாகத்தை சில ஐரோப்பிய நாடுகள் மட்டும் அங்கீகரித்திருக்கிறார்கள். அமெரிக்கா அதனை அங்கீகரிக்கவில்லை என்பதிலிருந்தே கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் பேச்சைக் கேட்பவர்கள் அல்ல என்பது நமக்குப் புரியும். கடாபியின் சர்வாதிகாரத்தனத்திற்கு எதிராகப் போராடக் கிளம்பிய லிபியக் கிளர்ச்சியாளர்களின் திசை எத்திக்கில் அமையும் என்பதை காலம்தான் சொல்லும்.

மூன்றாம் உலக நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களான பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் நமது பெரும் வணக்கத்துக்குரியவர்கள். ஆனால் மூன்றாம் உலக நாடுகளின் சர்வாதிகாரிகளாக, மனிதத்தை நசுக்குபவர்களாகத் திகழும் மகிந்தவையும், கடாபியையும் அவர்கள் ஆதரிப்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் சுதந்திரத்திற்கான, தேசிய இனங்களின் எழுச்சிக்கான வெகு மக்கள் போராட்டங்களை அரசுகள் அடக்கி, ஒடுக்கி, நசுக்குவதுதான் சரி என ஏற்றுக்கொள்வதுதான் மார்க்சியமா?

மூன்றாம் உலக நாடுகளின் வெகுஜனப் போராட்டங்களுக்கு உலக மார்க்சியத் தலைவர்கள் ஆதரவு தர மறுப்பார்களானால் மனிதாபிமானத்தையும், மனித உரிமைகளையும் தன் புறத்தோற்றமாகக் கொண்டுள்ள மேற்குலக ஏகாதிபத்தியங்கள் நோக்கித்தான் அப்போராட்டக்காரர்கள் செல்ல வேண்டும். சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் திரள் போராடும் போது யார் பக்கம் இருக்க வேண்டுமென இவ்வுலகத்தில் உள்ள மார்க்சியத் தலைவர்களுக்கு வழிகாட்ட மார்க்ஸ் தான் வர வேண்டும்.

“என்ன செய்யலாம் இதற்காக?” புத்தகத்தை மிகவும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தமிழினம் பட்ட இன்னல்களை நம் பின் தலைமுறைகள் அறிய அது ஒரு சிறந்த ஆவணமாகத் திகழும்.

போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசை சட்டத்தின் முன் நிறுத்தும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. குழுவின் அறிக்கையை ஐ.நா.அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இலங்கை அல்லது ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் யாராவது கேட்டுக்கொண்டால் மட்டுமே போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என ஐ.நா. பொதுச் செயலர் அறிவித்துள்ளார். விசாரணையை இந்தியாவின் உதவியுடன் தடுத்து நிறுத்த இலங்கையும் தயராகி வருகிறது.ஐ.நா.மனித உரிமை ஆணையம் 2009-ல் கொண்டு வந்த தீர்மானத்தின் போது இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை எடுத்த இந்தியா, தற்போது மீண்டும் ஒருமுறை அறநெறி பிறழ்ந்து அவ்வரலாற்றுப் பிழையைச் செய்யுமானால் ஐநா.வின் அடிப்படை உறுப்பினர் பதவியைக் கூட வகிக்கும் தார்மீகத் தகுதியை அது இழந்து போகும்.

Courtesy- செ.சண்முகசுந்தரம்

Sunday, January 31, 2010

ஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்?

1950-களில் மத்தியிலும் மாநிலத்திலும் பேராயக் கட்சி (காங்கிரஸ்) ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன் அப்போது நடுவணரசில் தொடர்வண்டித் துறை (ரயில்வே) அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயிலிருந்து இருபது-முப்பது பேர் வரை பலியானார்கள்.

"அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா

மக்கள் மாண்டது போதாதா"

வளர் பருவத்திலிருந்த தி.மு.க வெளியிட்ட இச் சுவரொட்டி1. நிர்வாகத் திறனின்மை

2. மக்கள் துயர்

3. மொழிவீச்சு

மூன்றையும் சரியாய் சேர்த்து, மக்களை ஒரு கணம் உற்றுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

1960-களின் தொடக்கம், சென்னைத் துறைமுகத்தில் தொழிலாளிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 1962-ல் சட்டப் பேரவை நடத்திய தேர்தல் வந்த போது, ரத்தக்கறை படிந்த சட்டையைக் கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் பெண்ணின் படம்.

“கூலி உயர்வு கேட்டார் அத்தான்

குண்டடி பட்டுச் செத்தார”

நீட்டு வசத்தில் போடப்பட்ட சுவரொட்டி நியாயம் கேட்டு, தமிழ்நாடு முழுக்க பயணித்தது.

அடுக்கு மொழியில், அளவான வார்த்தைகளில் சுவரொட்டி போடும் உத்தியை தி.மு.க. கையிலெடுத்தது. கருத்துப் படம் போடுதல், சிறு சிறு சுவரொட்டிகளாக்கி வெளியிடுதல் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது

1. பத்திரிகை

2. சுவரொட்டி

3. நாவன்மை

மூன்றையும் கலையாக்கி, மக்களிடம் கொண்டு வந்தது; நான்காவதாய் அதிவீச்சுள்ள திரைப்படக் கலையை கைவசப்படுத்தியது. அரசு ஒரு அடக்குமுறைக் கருவி என்ற சமூக விஞ்ஞானக் கருத்து சரியானதாக இருந்தாலும், அப்போதிருந்த பேராயக்கட்சி (காங்கிரஸ்) அரசு, ஒவ்வொரு சுவரொட்டியும் காகிதத்தில் சுருட்டப்பட்ட குண்டு என அறியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சுவரொட்டிகள் அச்சிட, ஒட்ட தடை ஏதுமில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத உருட்டல், மிரட்டல் இல்லாததால் அச்சகப் பெயர் துணிச்சலுடன் போடப்பட்டது.

ஈழத் தமிழ்ப் பகுதிகளில் பீரங்கி வெடித்து மூளை சிதறிய சிறுமி, பிணமாய்க் கிடக்கும் கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்து பிணமாய்த் துருத்திய குழந்தை, விமானக் குண்டு வீச்சால் அறுபட்ட கோழிகள் போல் கழுத்து துண்டான மனித உடலங்கள்,; - கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் உயிரோடு உலவினார்கள் என்று நம்ப முடியாத பிணக்குவியல்.

இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பெரும் வீச்சைத் தரும் சுவரொட்டிகளாக இக் கொடூரங்களைக் கொண்டுவர முடியும். கையளவு வெளியீடுகளாய் முட்டைத்தோடு போன்ற வழவழப்பில் தேர்தல் பரப்புரைக்கு எடுத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த வழியில் கடந்த நாட்களில் நடந்து வந்தார்களோ, அந்தக் கதவுகளை அடைததார்கள்.

உரிமைகளை எடுத்துக் கொள்ளல் என்ற பக்கத்துக்கு முன் உரிமைகள் வழங்கல் என்ற முதல்பக்கம் ஒன்றுளது. இந்த முதல்பக்கத்தை ஆட்சிக்கு வருகிற எவரும் மறந்து போவர். உரிமை பறித்தல் என்ற புள்ளியில் உரிமை மீட்டெடுப்புப் போராட்டம் உருவாகிறது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உரிமையையும் மற்றவர்க்கும் வழங்குதல் என்ற சனநாயகத்தின் விதியை ஐந்தாவது முறையாக ஆட்சியில் ஏறிய திராவிட முனனேற்றக் கழக ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர்.

“தமிழினப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரசைத் தோற்கடிப்பீர்”

மதுரையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நண்பர்கள் சுவரொட்டியை அச்சடித்து வெளியிட்டார்கள். தமிழினப் படுகொலையை நடத்துவது இலங்கை சிங்கள இனவெறி அரசு. உண்மையில் அதன் உட்கோடு வழியாக நடந்து போனால் இந்தியாதான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்துகிறது என்ற அதிர்ச்சி தரும் புள்ளியை வந்தடைய முடியும்

“நமது இலங்கை ராணுவம் களத்தில் நிற்பது என்பது ஒரு பேருக்குத்தான்; உண்மையில் இந்திய ராணுவத்தினர்தான் இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் இந்த அதிர்ச்சியை எளிதாகத் துடைத்தெறிவது போல் கூறினார்.

“இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லாவகையிலும் நம்முடன் வந்ததால்; விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்தது”

டி.சில்வா என்ற அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளார். எனவே “தமிழினப் படுகொலையை நடத்தும் காங்கிரசைத் தோற்கடிப்பீர்” என்று தானே இருக்க வேண்டும் என்று சுவரொட்டி அச்சிட்ட மதுரை நண்பர்களிடம் கேட்டேன்.

“அப்படித்தான் போடும்படி சொன்னோம். அச்சகத்துக்காரர் மறுத்து விட்டார்” என்றார்கள். அச்சகத்தின் பெயரில்லாமல் வெளியானது.

“யாருக்காக பேசுகிறார் அ.மார்க்ஸ்” என்றொரு சிறு வெளியீட்டை நான் கொண்டு வந்தேன். ஈழப் பிரச்னையை மையப்படுத்திய அ.மார்க்ஸ் நேர்காணல் ஒன்றுக்குப் பதிலுரையாக அது பின்னப்பட்டிருந்தது. அச்சிறு வெளியீட்டில் அச்சகத்தின் பெயர் இருக்காது. “ஈழப் பிரச்னைதானே, அச்சகத்தின் பெயர் வேண்டாம்”. என்று உரிமையாளர் தவிர்த்து விட்டார். காவல்துறை, அரசு அதிகாரத்தின்; நெருக்கடி அச்சகக்காரர்களின் தண்டுவடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழுணர்வாளர்களின் விருப்பத்தை; வணிகப் பார்வையில் கூட நிறைவேற்ற முடியாதவர்களாய் அச்சகத்தினர் ஆகிவிட்டனர்.

“காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்துக்குப் போடும் தூக்கு” - என்ற முழக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடத்தில் நின்றது. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விமரிசித்து கருத்துப்பட சுவரொட்டியை அச்சிட்டு ஒட்டிய தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அதனால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று சுவரொட்டிகள், வெளியீடுகள் அச்சிட்டுக் கொண்டு வரப்பட்டன- அதுவும் அச்சகப் பெயரில்லாமல்.

உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தலை எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒரு மாதிரியாகவும், ஆளுங்கட்சியாகிற போது எதிர் நிலையாகவும் கையாளுவதில் தி.மு.க. வினர் திறமை சாலிகள் என்பதை 2009 - மே 16-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் காட்டிவிட்டது.

இவர்கள் எதிர்பார்க்காத ஒரு திசையிலிருந்து, புதிய புயல் கிளம்பியது. ஈழத்தமிழர் துயரத்தை, விடுதலையைப் பேசுகிற ‘என்ன செய்யப் போகிறோம்; எமக்காகவும் பேசுங்களேன்| இறுதி யுத்தம், கருணாவின் துரோகம் போன்ற குறுந் தகடுகள் விநியோகமும் திரையிட்டுக் காட்டலும் முனைப்புடன் நடந்தன. எதிர்ப்பையும். தடையையும் முன்னுணர்ந்ததால் எடுத்த எடுப்பில் ஆயிரக்கணக்கில் பிரதிசெய்து விநியோகிக்கப்பட்டன. புத்திரிகைத் தடைச்சட்டம், அச்சக விதிகள், திரைப்படத் தணிக்கை போன்ற தணிக்கை விதிகள் குறும்படங்களுக்கு இல்லாததால் மளமளவென்று தீ கீழே இறங்கிப் பரவியது.

குறிப்பாக குறும்படங்களைத் திரையிடத் தடையில்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு முந்திய நாள் வந்தது. மக்கள் தொலைக்காட்சி தடைநீக்கம செய்யப்பட்ட குறும்படங்களை மாலையிலிருந்தே மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பியது. 12-5-09 மாலை முதல் மறுநாள் 13-5-09 காலை வாக்குச் சாவடிக்குப் போகிற வரை மக்களை விழிப்புப்படுத்தியபடி அனுப்பிக் கொண்டிருந்தது.

2001-ல் ஜெயலலிதா இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ‘ஐயோ என்னைக் கொல்றாங்க, என்னைக் கொல்றாங்க’ - என்று பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்ட கருணாநிதியின் அலறலுடன் சன்தொலைக்காட்சி, சன்செய்திகள், கே.டி.வி மூன்றும் விடியலில் மக்களை எழுப்பின. தேநீர்க்கடைக்கோ, காலை நடையாகவோ, அலுவலகவேலைக்கோ சென்ற ஒருவர் “என்னைக் கொல்றாங்க, என்னைக் கொல்றாங்க” என்ற அலறலைக் கேட்டபடியே ஒவ்வொரு வீடாய்த் தாண்டிப் போனார். காட்சி ஊடகத்தின் அசுரத்தனத்தை தமிழகம் உணர்ந்த அந்த முதல் வாய்ப்புக்குப் பிறகு இப்பொழுதுதான் மக்கள் தொலைக் காட்சி மூலம் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டை மக்கள் உணரமுடிந்தது.

பெரியார் திராவிடர் கழகம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், ஈழத்தமிழர்களால் நடத்தப்பெறும் கணினிதமிழ் நிறுவனம் (புதிய பராசக்தி, மனோகரா, கொலைஞர் - போன்ற ரீமிக்ஸ் குறும் படங்கள்) - போன்றவை மீது போலீஸ் பாய்ந்து பறிமுதல் பண்ணி கைது, வழக்கு என பிரவேசித்தது இந்த ஊடகங்களின் மீது அரசு செலுத்திய வன்முறை.

ஊடகங்கள் மீதான அரசவன்முறை, ஊடகச் செயல்பாட்டின் எல்லைப் பரப்பைச் சுருக்கியது என்றால், ஊடக வன்முறையும் இணைந்து மக்களின் கருத்தறியும் உரிமையில் சுருக்குக் கயிற்றை இறுக்கியது. எடுத்துக்காட்டு பிரபாகரன் மரணம் பற்றிய பரப்புரை.

ஒரு செய்தி பற்றி குறைந்த பட்ச உண்மைத் தேடல் கூட இல்லாமல் மே-17 மாலை, மே - 18 ஆகிய நாட்களில வடஇந்திய ஆங்கில ஊடகங்கள் நடத்திய வன்முறை பற்றி கொழும்பிலிருந்து தமிழ் ஆய்வறிவாளர் ராஜசிங்கம் கூறுகிறார்;

“அது இலங்கையிலிருந்து வந்தது. 3மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என உறுதியாக அந்தச் செய்தி கூறியது. இதுவே எனக்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனப் புரியவைத்தது. ஆனால் அவர் காலைவரை இருக்க மாட்டார் என்பதாகவும அந்தச் செய்திகூறியது. அதற்குப் பொருள் காலையில் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்பதாக நமக்கப் புரியவைக்க முயற்சித்த செய்தி அது. இதையடுத்து கொழும்பிலிருந்து ஒரு செய்திவந்தது. அதில் பிரபாகரனும் சூசையும் இறந்து விட்டார்கள் என்று கூறினார்கள். ‘அவர்கள் சரணடைந்தார்கள், ஒரு வெள்ளைப் பவுடர் அவர்கள் வாயில் வீசப்பட்டது. நாளை அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி கூறப்படும்”.

எல்லைகளற்று, எது பற்றிய கவலையுமற்று, எந்த அறமதிப்பீடுக்கும் உட்படாது செயல்படுகிற ஊடக பயங்கர வாதத்துக்கு மற்றுமொரு சான்று இலங்கை ராணுவத் தாக்குதலின் காயமடைந்த 25,000 மக்கள் மரணம் என்று கடற்புலிகள் தலைவர் சூசை கொடுத்த செய்தியை அலட்சியப்படுத்தி, துளிச்சிந்தனையும் கவனமும் அதில் பதிந்து விடக்கூடாது என்பதில் இலங்கை அரசுடன் இந்திய ஊடக பயங்கரவாதம் கைகோர்த்த புள்ளி.

புலிகள் முழுமையாய் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை ஊடகங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பரப்பின. “எமது யுத்தம் புலிகளுக்கு எதிரானது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரானது அல்ல” என்று நாடாளுமன்றத்தில் ராசபக்ஷே அறிவித்தார். எந்த விமரிசனமும் அற்று ஊடகங்கள் வழிமொழிந்தன. போராளிகள், தலைவர்கள் மரணம், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மரணம் - என இலங்கை ராணுவமும் அரசும் தந்த எல்லாவற்றையும் அப்படி அப்படியே ஆயிரம் தடவை காட்டி, ஆயிரம் தடவை அறிவித்தன. குறிப்பாய் வட இந்திய ஆங்கில தொலைக் காட்சிகள் சலிக்காமல் தொடர்ந்தன. இலங்கை அரசு கொடுத்ததை அப்படியே காட்டிய ஊடகங்களில் ஒருவருக்காவது “அந்த இடத்துக்கு எங்களை அழைத்துப் போய்க் காட்டு,” - என்று கேட்கிற துணிவு வரவில்லை. ஏன் நம்மை அந்த இடத்திற்கு அழைத்துப் போக மறுக்கறார்கள் என்று கேள்வி எழுப்புகிற குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் போனது.

இராசபக்ஷே என்ற இட்லரைக் கண்டு நடுங்குகிறவர்கள் இவர்கள். களத்தில் உள்ளே அனுமதிக்காது, தான் வழங்குகிற செய்திகளை மட்டுமே ஊடகங்களைப் பேசவைத்தது அரச பயங்கரவாதமெனில், அதை அப்படியே வாய்பொத்தி ஏற்று, வெளியிட்டது ஊடக பயங்கரவாதம்.

அக்னி நட்சத்திர நாளில் காற்றேயில்லாது அமுங்கிக் கிடக்கிறது காலைப் பொழுது. எதனையும், எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்ளும் வெப்பம் கண்திறந்து வருகிறது. ஓரிருநாள் இயற்கையை தாங்கிக் கொள்ள மாட்டாமல் இங்கு தமிழினம் புரளுவதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. அங்கு கஞ்சியில்லாமல், தண்ணீரில்லாமல், காயத்துக்கு மருந்தில்லாமல், இயற்கையின் எந்த வேற்றுமையையும் உணரக் கூடாமல் பைத்திய மனோநிலையில் ஒடுக்கிவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கூட்டத்தின் கதி என்ன? எதையும் உணரமுடியாத பிணங்கள் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

“ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும். உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்”.

இந்தப் பிரச்னையைப் பேசுகிற, அலசுகிற, மனித சுபாவமே இல்லாத ஊடகங்களைப் பற்றி ராஜிவ் டோக்ரா என்ற முன்னாள் இந்திய ராஜதந்திரி இவ்வாறு பேசுகிறார். எவருக்கு கண்களும் காதுகளும் உண்டோ, அவரே உலகின் மற்ற காதுகளுக்கும் கண்களுக்கும் மனித அவலத்தைக் கொண்டு போக முடியும். ஒரு நாளில் 25 ஆயிரம் மனித உயிர்கள் மரித்ததை, இதனினும் கூடுதலாய் லட்சக் கணக்கில் பட்டினிச் சாவுக்குள் போவதை - இவர் மரணம், அவர் மரணம் என்று இட்டுக்கட்டிய பரபரப்புக்குள் எளிதாய்த் தூக்கி எறிந்து விட்டுப் போக முடிந்தது ஊடகங்களால்..

“சிங்கள இனவாதம் என்ற ஒரு வஸ்து நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டு வருவதையே மறுக்கும் தி ஹிண்டு வின் (வுhந ர்iனெர னுயடைல) மூடத்தனத்தைக் கண்டிக்க சொற்களே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது ஈனத்தனமான கருத்துக்களையும் பரப்பும் சுதந்திரம் தான் என்பதை உணர்ந்து பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய காலகட்டம் இது” என்று காலச்சுவடு மார்ச் 2009 - இதழ் தலையங்கத்தில் எழுதப் பட்டிருப்பது இந்து நாளிதழை பற்றியது மட்டுமேயல்ல.


ஈழ இனப்படுகொலை

சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் இருந்த நிலையில் இன்று ஈழத் தமிழர்கள் விடப் பட்டிருக்கிறார்கள். மூச்சுப் பரியாமல் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகயுத்தத்தின் பின் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் பாதுகாப்பு அளிக்க, அமெரிக்க உதவியோடு இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் இருந்த பூமியை இழந்திருக்கிறார்கள்.

ராஜிவ்டோக்ரா சொல்வது போல இலங்கை எனும் சின்னஞ்சிறு பகுதியில் என்ன நடக்கிறது என்று கவனம் செலுத்தியிருக்கவேண்டும். கவனம் செலுத்த வைக்கிற காரியத்தை ஊடகங்களும், அரசியல் ஆய்வு அறிஞர்களும் செய்ய தவறியிருக்கிறார்கள். தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்கிற வேலைக்கு பல சக்திகள் முயன்னின்றிருக்கின்றன. ஒரு இனவிடுதலைப் போரின் பின்னடைவை முன்னெடுப்பதில் பல சக்திகளும் தீவிரமாய முனைந்தார்கள்.

1. அனைத்துக் கட்சிகளின் அக் - 14 துரோகம்

15 - நாளில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்தவில்லையென்றால் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றிய போது காட்டிய வீரம் செயல் முறைக்குக் கொண்டுபோவதில் வெளிப்படவில்லை. முடிவு செயலாகியிருந்தால், ஈழத் தமிழரின் மண்ணில் வெளிச்சத்தின் விதை ஊன்றப்பட்டிருக்கும். முதல் பதவி விலகல் கடிதத்தை தன் மகள் கொடுக்க, பிறகு ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் தந்த கடிதங்களை - மக்களவைத் தலைவருக்கு அனுப்பாமல் தானே சேகரித்து வைத்துக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் அக்டோபர் 14 - துரோகம் அது.

“அரசியல் வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கிறான்; அறிஞர்கள் அடுத்த தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்” என்று சொல்லப்படுகிற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. எதிர்வரும் தலைமுறைகளின் வாழ்வொளியில், தடையாய்ப் பரவும் இருட்டை முன்கூட்டி விலக்கும் தத்துவம், செயல்முறைச் சாதனைகளுக்குரிய அறிஞர்களை தலைமுறைகளின் தலைவர் எனக் குறிப்பிடுவார்கள். அரசியல் வாதியையும் அவ்வாறு குறிப்பிடமுடியும். அவர் பத்துத் தலைமுறைகளுக்குக் சொத்துச் சேர்த்துவைத்திருக்கிறார். ஆகவே தலைமுறைகளின் தலைவர் என்று கூறிக் களிப்படையலாம். இந்த அர்த்தத்தில் கருணாநிதியும் தலைமுறைகளின் தலைவராக முதலிடம் பிடிக்கிறார்.

2. இந்தியா, இந்தியா, இந்தியா

தேசிய இனப்பிரச்னை என்ற சோற்றுப் பானையை இந்தியா கழுவிக் கவிழ்த்து வைத்து அரைநூற்றாண்டுக் காலம் கடந்து விட்டது. தேசிய இனங்களின் உரிமைகளுக்கு முகம் கொடுத்தறியாத இந்தியா, அண்டையிலுள்ள ஈழத்தமிழர் இனவிடுதலைக்காக குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏறத்தாழ அனைத்து நாடுகளும், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்த போது, இந்தியாவின் தொண்டைக் குழியிலிருந்து ஒரு சொல்லும் எழும்பவில்லை. தன்னுடைய ஆதிக்க நலன்களுக்கு கட்டுப்பட்ட ஒன்றாக, தனது காலடிக்குக் கீழுள்ள சின்னஞ்சிறு புழுவாகவே வைத்திருக்க விரும்புகிறது. இந்தியாவின் கண்காணிப்புகளையும் மீறி சீனாவும், பாகிஸ்தானும் அந்தச் சின்னஞ்சிறு தீவில் திடமாகக் கால் பதித்துள்ளன. இந்தியாவின் கையை மீறி, அல்லது கையை உதறி சீனாவை, பாகிஸ்தானை தனக்குள் ஏந்த ஆரம்பித்துவிட்ட நிலையில், இலங்கை ஒரு புழு அல்ல் கொட்டும் தேள் என்பது புரிய ஆரம்பிக்கும். ஈழத் தமிழினத்தை அழிப்பதில் எல்லாமுமாய் இருந்ததின் மூலம் தாயகத் தமிழினத்துக்கு முதல் எதிரியாய் மாறியுள்ளது இந்தியா.

3. பாழ்பட்ட உலகு

ஓவ்வொரு நாடும் தனது தேசிய நலன்கள் என்ற நிகழ்ச்சி நிரலிலிருந்து உலக அசைவுளை அளவிடுகிறார்கள். ஒரு நாட்டின் தலைமை சக்தியாய் இயங்கும் ஆளும் வர்க்கக் குழுக்களின் நலன் தான் தேசிய நலனாக இருந்து வருகிறது. ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்கக் கால்கள் பதிந்ததை, அங்குள்ள ஆளும் வர்க்கக் குழுக்களின் பசிக்குத் தீனிபோடும் செயலாகவே காணமுடியும். அது புரட்சிகரப் போராட்டமாக இருக்கட்டும்; இனவிடுதலைப் போராக இருக்கட்டும்; காலனிய ஆதிக்க நுகத்தடிகளிலிருந்து விடுபடுவதாக இருக்கட்டும்; பயங்கரவாதத்துக்கு எதிரான போராகவே ஆளும்வர்க்கங்கள் காண்பார்கள். ஒரு நாடு இன்னொடு நாட்டின் மீது கொள்ளும் நல்லெண்ணம் என்பது, இன்னொரு நாட்டில் எவ்வளவு கைவைக்கலாம் என்ற திட்டமிடுதலில் தான் உருவாகிறது. இலங்கைக்கு உதவிய எல்லா நாடுகளின் முகமும் இந்த ஒரு புள்ளியில் குவிகிறது.

உலகில் எங்கெங்கு மக்கள் விடுதலைப் போர் இனி முளைவிட்டாலும் பயங்கரவாத முத்திரை குத்தி ஒழித்து விடலாம் என்பதற்கு சிங்களப் பேரின இலங்கை முன்மாதிரியாகியிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முழக்கத்தினை 2001, அக்டோபர் 11- க்குப் பின் அமெரிக்கவின் புஸ் முன்வைத்தார். இலங்கையின் இட்லர் அதைக் கையிலெடுத்து வெற்றி கண்டுள்ளார். எது விடுதலைப் போர், எது பயங்கர வாதம் என்று பிரித்துக் காணவேண்டிய பரிதாபத்திற்கு சிந்தனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

4. உண்மைக்கும் மக்களுக்கும் எதிரான ஊடகம்

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டில், 20 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்தன ஊடகங்கள். குறிப்பாக இந்தியாவைத் தாண்டி வெளியே இருக்கிற மேற்குலக ஊடகங்கள் தமது தோளில் சுமந்த பொறுப்பினால் இஸ்ரேலியத் தாக்குதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 20 - நாட்களில் ஒரு இன அடக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவர முடிந்த இவர்களால் - அறவழிப் போராட்டத்தில் 28 ஆண்டுகள், ஆயுதவழிப் போரில் 32 ஆண்டுகள் அறுபது ஆண்டுகளாகியும் ஒரு பேரினவெறியை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை எனில் உலக ஊடகங்கள் ஒரு பங்கும் ஆற்றவில்லை என்பது உண்மையாகிறது. அதனால் எதிர் நிலை எடுத்தன என்பதும் பொருளாகிறது. இந்திய ஊடகங்கள் திட்டவட்டமாக எதிர் நிலையைக் காட்டின. அதேநேரத்தில் இந்த இனவிடுதலைப் போரில் படுபாதகப் பங்காற்றின.

மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டநேசனலின் உயர்மட்டக் குழு உறுப்பினராக பணியாற்றியவரும் இல்லினாய்ஸ் பல்கலைகழக பேராசிரியருமான பிரான்சிஸ் அந்தோணி பாய்ல் உலக ஊடகங்கள் இனவேற்றுமை பாராட்டியதை பின்வருமாறு அம்பலப்படுத்தியுள்ளார்.

“பாலஸ்தீனத்தின் மீதும் போஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இன வெறி என்றே நான் கூறுவேன். இது தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டு கொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் போஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர் - சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.”

இந்திய ஊடகங்களும், உலக ஊடகங்களும் அவர்களுக்குரிய பங்கையும் இனவேற்றுமை அடிப்படையில் வெளிப்படுத்தியதன் காரணமாக முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 25 ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கும், முட்கம்பி வேலிகளுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டதற்கும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவரவர் தன்னலன்கள் அடிப்படையில், விடுதலைப் போரின் பின்னடைவை விரைவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இப்போது ராஜீவ் டோக்கராவின் கேள்வியை மீண்டும் கேட்போம்.

“மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும்.”

ஆன்மா செத்துப்போனவர்கள் யார்?

கருணாநிதியின் பசப்படியும்... நெடுமாறனின் பதிலடியும்..

விடுதலைப் புலிகளேக் குறைகூற கருணாநிதிக்குத் தகுதி உண்டா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் விடுதலைப்புலிகளேக் கொச்சைப் படுத்தியும் கருணாநிதி விடுத்த அறிக்கைக்கு வரிக்கு வரி பதிலடிகொடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

பசப்படி: இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளேவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மெளனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது?

பதிலடி: இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதைத் தடுக்கத் தவறி விட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காகத் தொடர்ந்து பொய்த் தகவல்களே கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.

பசப்படி: 1986ஆம் ஆண்டு மதுரை டெசோ மாநாட்டிற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வரவில்லை.

பதிலடி: 1986 டெசோ மாநாட்டில் ஈரோஸ் பாலகுமாரன், இ.பி.ஆர்.எல்.எஃப், பத்மநாபா, புளேட் உமா மகேசுவரன் யாருமே கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தம் பிரதிநிதிகளேயே அனுப்பினார்கள். பிரபாகரனும் தம் பிரதிநிதியை அனுப்பினார்.

பசப்படி: எல்லாம் முடிந்து மேலும் முடிவுறமோ? என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போது கூட அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.

பதிலடி: இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு அவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறிய பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.

பசப்படி: 2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்ன என்பதைத் தெரிவிக்காமலே பிரபாகரன் இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார் என்று ரணில் சொல்லியுள்ளார்.

பதிலடி: இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு சூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்பட வில்லை. இத்திட்டத்தை ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை 2001 அக்டோபர் 31 ஆம் நாள் நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாற்றுத் திட்டம் குறித்து சிங்கள அரசு பேச மறுத்ததால்தான் பேச்சு வார்த்தை முறிந்தது. சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலக மறுத்தது தான் முறிவுக்குக் காரணமே தவிர பிரபாகரன் அல்ல.

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன்னின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சு வார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதால் விடுதலைப் புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்து கொள்ள வில்லை என்று கூறுவதைப் போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. இரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளே அவதூறு செய்வதாகும்.

பசப்படி: 2005இல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் பிரபாகரன் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்ன வென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த சனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத்தரத் தவறி விட்டார் என்று இரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த்தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைபிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பதிலடி: குடியரசுத் தலைர் தேர்தலில் இரணில் விக்ரமசிங்காவை ஆதரிக்கப் புலிகள் தவறி விட்டார்கள் என்பது கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டு. போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் இரணிலும் பிரபாகரனும் கையயழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு, நான்காண்டு காலம் பிரதமராக இருந்த இரணில் அந்த உடன்பாட்டில் எந்த ஒரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார். இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களே இந்தியாவிற்கு அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களே வாங்கிக் குவித்தார். புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்தச் சதி செய்தார். இந்தக் காரணங்களால் அவரைத் தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்தப் பயனும் விளேயப் போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர். தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக பதவிகள் எதுவும் கூற விரும்பவில்லை.

பசப்படி: என்னையும் மாறனையும் 15.3.1989 அன்று, அன்றையப் பிரதமர் இராசீவ்காந்தி டில்லிக்கு அழைத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி நீங்களும் மாறனும் வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், அதிக பட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளே நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் உறுதியளித்தார்.

பதிலடி: 1989ஆம் ஆண்டில் இராசீவ் காந்தி, கருணாநிதியையும் மாறனையும் அழைத்து பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து பேசி முடிவு காண வழி காணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார். அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்து திரும்பியதற்காக வைகோ மீது அடாத பழியைச் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்ய சதி நடைபெறுவதாகவும் புலம்பினார்.

பிரதமராக வி.பி.சிங் இருக்கும் போது தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ, அதற்கேற்ப இந்திய அரசு நடந்து கொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்த போது இவர் செய்தது என்ன? ஈழத் தமிழர்களின் உண்மைப் பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களேச் சேர்ந்தவர்களேயும் பேச்சு வார்த்தைக்கு அழைக்க இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு சீர்குலைத்தவர் கருணாநிதியே.

பசப்படி: சகோதர யுத்தத்தின் காரணமாக மாவீரன் மாத்தையா, சிறி சபா ரத்தினம், பத்மநாபா, அவரோடு 10 போராளிகள், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வன், யோகீஸ்வரன், வாசுதேவா என்று பலரையும் மரணக்குழியிலே தள்ளியும், இலங்கையில் 2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த சில நாட்களுக்குள் 9.4.2004இல் கிழக்கு இலங்கையில் சகோதர யுத்தம் - பிரபாகரன், கருணா. படைகளிடையே - இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துப் போட்டது...

பதிலடி: திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப் போன பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார். அவருடைய கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சிச் சண்டையில் படுகொலை செய்யப்பட்டதைத் தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டை பற்றிப் பேசத் தகுதியற்றவர்.

பசப்படி: விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளேவுகள் எப்படியாயின; எங்கே போய் முடிந்தன என்பதை எண்ணிப் பார்த்து நாம் மெளனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மெளன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது?

பதிலடி: இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளே அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன் வராமல் மறைப்பதற்குத் துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப் போவதுமில்லை.

பிரபாகரன் - சில குறிப்புகள்

தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ''போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்'' என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ''எடுத்தால் எங்கே வைப்பது'' என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
''ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?'' என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ''யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.''
''பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை'' என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ''தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்'' என்பார்!
தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
'உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!
பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ''நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!''
''ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?'' என்றுஅடக்க மாகச் சொல்வார்!
'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
(நன்றி: ஆனந்த விகடன்)