Saturday, September 5, 2009

புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம் ???

2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?

வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.


பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது) பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும். புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.

பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா? ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?

போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வதந்திகள்!! எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள். வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா? இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா? ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா? சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா? புலிகளின் ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா? தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா? அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா? ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?

இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்? இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன? (தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)

மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்? ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.

ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.

பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா? பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன? தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன? பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?

சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான். இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார். நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன். மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,

அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர். சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன். போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. ஒன்று இராணுவத்துக்கு இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு. இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.

அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர் இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா? அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன்.

Noel Nadesan (Australia)
Dr.Rajasingham Narendran (Middle East)
Mrs. Rajeswari Balasubramaniam (U.K)
Manoranjan Selliah (Canada)
Rajaratnam Sivanathan (Australia)

இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள். நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396. இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video. எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும். காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.

இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள்.http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454

கிழக்கு முஸ்லீம்கள்

புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது. அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள். இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.

யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு. இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.

பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

அது போல ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை. கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை. ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.

கடைசியாக,

கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார். அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.

- டி.அருள் எழிலன் ( darulezhilan@gmail.com )

ஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்?

1950-களில் மத்தியிலும் மாநிலத்திலும் பேராயக் கட்சி (காங்கிரஸ்) ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன் அப்போது நடுவணரசில் தொடர்வண்டித் துறை (ரயில்வே) அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயிலிருந்து இருபது-முப்பது பேர் வரை பலியானார்கள்.

"அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா

மக்கள் மாண்டது போதாதா"

வளர் பருவத்திலிருந்த தி.மு.க வெளியிட்ட இச் சுவரொட்டி

1. நிர்வாகத் திறனின்மை

2. மக்கள் துயர்

3. மொழிவீச்சு

மூன்றையும் சரியாய் சேர்த்து,மக்களை ஒரு கணம் உற்றுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

1960-களின் தொடக்கம்,சென்னைத் துறைமுகத்தில் தொழிலாளிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு தொழிலாளி மரணமடைந்தார்.1962-ல் சட்டப் பேரவை நடத்திய தேர்தல் வந்த போது, ரத்தக்கறை படிந்த சட்டையைக் கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் பெண்ணின் படம்.

கூலி உயர்வு கேட்டார் அத்தான்

குண்டடி பட்டுச் செத்தார

நீட்டு வசத்தில் போடப்பட்ட சுவரொட்டி நியாயம் கேட்டு, தமிழ்நாடு முழுக்க பயணித்தது.

அடுக்கு மொழியில், அளவான வார்த்தைகளில் சுவரொட்டி போடும் உத்தியை தி.மு.க. கையிலெடுத்தது. கருத்துப் படம் போடுதல், சிறு சிறு சுவரொட்டிகளாக்கி வெளியிடுதல் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது

1. பத்திரிகை

2. சுவரொட்டி

3. நாவன்மை

மூன்றையும் கலையாக்கி, மக்களிடம் கொண்டு வந்தது; நான்காவதாய் அதிவீச்சுள்ள திரைப்படக் கலையை கைவசப்படுத்தியது. அரசு ஒரு அடக்குமுறைக் கருவி என்ற சமூக விஞ்ஞானக் கருத்து சரியானதாக இருந்தாலும், அப்போதிருந்த பேராயக்கட்சி (காங்கிரஸ்) அரசு, ஒவ்வொரு சுவரொட்டியும் காகிதத்தில் சுருட்டப்பட்ட குண்டு என அறியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சுவரொட்டிகள் அச்சிட, ஒட்ட தடை ஏதுமில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத உருட்டல், மிரட்டல் இல்லாததால் அச்சகப் பெயர் துணிச்சலுடன் போடப்பட்டது.

ஈழத் தமிழ்ப் பகுதிகளில் பீரங்கி வெடித்து மூளை சிதறிய சிறுமி, பிணமாய்க் கிடக்கும் கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்து பிணமாய்த் துருத்திய குழந்தை,விமானக் குண்டு வீச்சால் அறுபட்ட கோழிகள் போல் கழுத்து துண்டான மனித உடலங்கள்,; - கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் உயிரோடு உலவினார்கள் என்று நம்ப முடியாத பிணக்குவியல்.

இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பெரும் வீச்சைத் தரும் சுவரொட்டிகளாக இக் கொடூரங்களைக் கொண்டுவர முடியும். கையளவு வெளியீடுகளாய் முட்டைத்தோடு போன்ற வழவழப்பில் தேர்தல் பரப்புரைக்கு எடுத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த வழியில் கடந்த நாட்களில் நடந்து வந்தார்களோ, அந்தக் கதவுகளை அடைததார்கள்.

உரிமைகளை எடுத்துக் கொள்ளல் என்ற பக்கத்துக்கு முன் உரிமைகள் வழங்கல் என்ற முதல்பக்கம் ஒன்றுளது. இந்த முதல்பக்கத்தை ஆட்சிக்கு வருகிற எவரும் மறந்து போவர். உரிமை பறித்தல் என்ற புள்ளியில் உரிமை மீட்டெடுப்புப் போராட்டம் உருவாகிறது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உரிமையையும் மற்றவர்க்கும் வழங்குதல் என்ற சனநாயகத்தின் விதியை ஐந்தாவது முறையாக ஆட்சியில் ஏறிய திராவிட முனனேற்றக் கழக ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர்.

தமிழினப் படுகொலைக்குத் துணை போகும் காங்கிரசைத் தோற்கடிப்பீர்

மதுரையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நண்பர்கள் சுவரொட்டியை அச்சடித்து வெளியிட்டார்கள். தமிழினப் படுகொலையை நடத்துவது இலங்கை சிங்கள இனவெறி அரசு. உண்மையில் அதன் உட்கோடு வழியாக நடந்து போனால் இந்தியாதான் இந்தக் கொடூரத்தை நிகழ்த்துகிறது என்ற அதிர்ச்சி தரும் புள்ளியை வந்தடைய முடியும்

நமது இலங்கை ராணுவம் களத்தில் நிற்பது என்பது ஒரு பேருக்குத்தான்;உண்மையில் இந்திய ராணுவத்தினர்தான் இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்என்று இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் இந்த அதிர்ச்சியை எளிதாகத் துடைத்தெறிவது போல் கூறினார்.

இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லாவகையிலும் நம்முடன் வந்ததால்; விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்தது

டி.சில்வா என்ற அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளார். எனவே தமிழினப் படுகொலையை நடத்தும் காங்கிரசைத் தோற்கடிப்பீர்என்று தானே இருக்க வேண்டும் என்று சுவரொட்டி அச்சிட்ட மதுரை நண்பர்களிடம் கேட்டேன்.

அப்படித்தான் போடும்படி சொன்னோம். அச்சகத்துக்காரர் மறுத்து விட்டார்என்றார்கள். அச்சகத்தின் பெயரில்லாமல் வெளியானது.

யாருக்காக பேசுகிறார் அ.மார்க்ஸ்என்றொரு சிறு வெளியீட்டை நான் கொண்டு வந்தேன். ஈழப் பிரச்னையை மையப்படுத்திய அ.மார்க்ஸ் நேர்காணல் ஒன்றுக்குப் பதிலுரையாக அது பின்னப்பட்டிருந்தது. அச்சிறு வெளியீட்டில் அச்சகத்தின் பெயர் இருக்காது. ஈழப் பிரச்னைதானே, அச்சகத்தின் பெயர் வேண்டாம்”. என்று உரிமையாளர் தவிர்த்து விட்டார். காவல்துறை, அரசு அதிகாரத்தின்; நெருக்கடி அச்சகக்காரர்களின் தண்டுவடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழுணர்வாளர்களின் விருப்பத்தை; வணிகப் பார்வையில் கூட நிறைவேற்ற முடியாதவர்களாய் அச்சகத்தினர் ஆகிவிட்டனர்.

காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்துக்குப் போடும் தூக்கு” - என்ற முழக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடத்தில் நின்றது. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விமரிசித்து கருத்துப்பட சுவரொட்டியை அச்சிட்டு ஒட்டிய தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

அதனால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று சுவரொட்டிகள், வெளியீடுகள் அச்சிட்டுக் கொண்டு வரப்பட்டன- அதுவும் அச்சகப் பெயரில்லாமல்.

உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தலை எதிர்க்கட்சியாக இருக்கிறபோது ஒரு மாதிரியாகவும், ஆளுங்கட்சியாகிற போது எதிர் நிலையாகவும் கையாளுவதில் தி.மு.க. வினர் திறமை சாலிகள் என்பதை 2009 - மே 16-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் காட்டிவிட்டது.

இவர்கள் எதிர்பார்க்காத ஒரு திசையிலிருந்து, புதிய புயல் கிளம்பியது. ஈழத்தமிழர் துயரத்தை, விடுதலையைப் பேசுகிற என்ன செய்யப் போகிறோம்; எமக்காகவும் பேசுங்களேன்| இறுதி யுத்தம், கருணாவின் துரோகம் போன்ற குறுந் தகடுகள் விநியோகமும் திரையிட்டுக் காட்டலும் முனைப்புடன் நடந்தன. எதிர்ப்பையும். தடையையும் முன்னுணர்ந்ததால் எடுத்த எடுப்பில் ஆயிரக்கணக்கில் பிரதிசெய்து விநியோகிக்கப்பட்டன. புத்திரிகைத் தடைச்சட்டம், அச்சக விதிகள், திரைப்படத் தணிக்கை போன்ற தணிக்கை விதிகள் குறும்படங்களுக்கு இல்லாததால் மளமளவென்று தீ கீழே இறங்கிப் பரவியது.

குறிப்பாக குறும்படங்களைத் திரையிடத் தடையில்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு முந்திய நாள் வந்தது. மக்கள் தொலைக்காட்சி தடைநீக்கம செய்யப்பட்ட குறும்படங்களை மாலையிலிருந்தே மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பியது. 12-5-09 மாலை முதல் மறுநாள் 13-5-09 காலை வாக்குச் சாவடிக்குப் போகிற வரை மக்களை விழிப்புப்படுத்தியபடி அனுப்பிக் கொண்டிருந்தது.

2001-ல் ஜெயலலிதா இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தார் ஐயோ என்னைக் கொல்றாங்க, என்னைக் கொல்றாங்க’ - என்று பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்ட கருணாநிதியின் அலறலுடன் சன்தொலைக்காட்சி, சன்செய்திகள், கே.டி.வி மூன்றும் விடியலில் மக்களை எழுப்பின. தேநீர்க்கடைக்கோ, காலை நடையாகவோ, அலுவலகவேலைக்கோ சென்ற ஒருவர் என்னைக் கொல்றாங்க, என்னைக் கொல்றாங்கஎன்ற அலறலைக் கேட்டபடியே ஒவ்வொரு வீடாய்த் தாண்டிப் போனார். காட்சி ஊடகத்தின் அசுரத்தனத்தை தமிழகம் உணர்ந்த அந்த முதல் வாய்ப்புக்குப் பிறகு இப்பொழுதுதான் மக்கள் தொலைக் காட்சி மூலம் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டை மக்கள் உணரமுடிந்தது.

பெரியார் திராவிடர் கழகம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்,ஈழத்தமிழர்களால் நடத்தப்பெறும் கணினிதமிழ் நிறுவனம் (புதிய பராசக்தி,மனோகரா, கொலைஞர் - போன்ற ரீமிக்ஸ் குறும் படங்கள்) - போன்றவை மீது போலீஸ் பாய்ந்து பறிமுதல் பண்ணி கைது, வழக்கு என பிரவேசித்தது இந்த ஊடகங்களின் மீது அரசு செலுத்திய வன்முறை.

ஊடகங்கள் மீதான அரசவன்முறை, ஊடகச் செயல்பாட்டின் எல்லைப் பரப்பைச் சுருக்கியது என்றால், ஊடக வன்முறையும் இணைந்து மக்களின் கருத்தறியும் உரிமையில் சுருக்குக் கயிற்றை இறுக்கியது. எடுத்துக்காட்டு பிரபாகரன் மரணம் பற்றிய பரப்புரை.

ஒரு செய்தி பற்றி குறைந்த பட்ச உண்மைத் தேடல் கூட இல்லாமல் மே-17 மாலை,மே - 18 ஆகிய நாட்களில வடஇந்திய ஆங்கில ஊடகங்கள் நடத்திய வன்முறை பற்றி கொழும்பிலிருந்து தமிழ் ஆய்வறிவாளர் ராஜசிங்கம் கூறுகிறார்;

அது இலங்கையிலிருந்து வந்தது. 3மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என உறுதியாக அந்தச் செய்தி கூறியது. இதுவே எனக்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனப் புரியவைத்தது. ஆனால் அவர் காலைவரை இருக்க மாட்டார் என்பதாகவும அந்தச் செய்திகூறியது. அதற்குப் பொருள் காலையில் அவரைக் கொன்றுவிடுவார்கள் என்பதாக நமக்கப் புரியவைக்க முயற்சித்த செய்தி அது. இதையடுத்து கொழும்பிலிருந்து ஒரு செய்திவந்தது. அதில் பிரபாகரனும் சூசையும் இறந்து விட்டார்கள் என்று கூறினார்கள். அவர்கள் சரணடைந்தார்கள், ஒரு வெள்ளைப் பவுடர் அவர்கள் வாயில் வீசப்பட்டது. நாளை அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி கூறப்படும்”.

எல்லைகளற்று, எது பற்றிய கவலையுமற்று, எந்த அறமதிப்பீடுக்கும் உட்படாது செயல்படுகிற ஊடக பயங்கர வாதத்துக்கு மற்றுமொரு சான்று இலங்கை ராணுவத் தாக்குதலின் காயமடைந்த 25,000 மக்கள் மரணம் என்று கடற்புலிகள் தலைவர் சூசை கொடுத்த செய்தியை அலட்சியப்படுத்தி, துளிச்சிந்தனையும் கவனமும் அதில் பதிந்து விடக்கூடாது என்பதில் இலங்கை அரசுடன் இந்திய ஊடக பயங்கரவாதம் கைகோர்த்த புள்ளி.

புலிகள் முழுமையாய் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை ஊடகங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பரப்பின. எமது யுத்தம் புலிகளுக்கு எதிரானது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரானது அல்லஎன்று நாடாளுமன்றத்தில் ராசபக்ஷே அறிவித்தார். எந்த விமரிசனமும் அற்று ஊடகங்கள் வழிமொழிந்தன. போராளிகள், தலைவர்கள் மரணம், பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனி மரணம் - என இலங்கை ராணுவமும் அரசும் தந்த எல்லாவற்றையும் அப்படி அப்படியே ஆயிரம் தடவை காட்டி, ஆயிரம் தடவை அறிவித்தன. குறிப்பாய் வட இந்திய ஆங்கில தொலைக் காட்சிகள் சலிக்காமல் தொடர்ந்தன. இலங்கை அரசு கொடுத்ததை அப்படியே காட்டிய ஊடகங்களில் ஒருவருக்காவது அந்த இடத்துக்கு எங்களை அழைத்துப் போய்க் காட்டு,” - என்று கேட்கிற துணிவு வரவில்லை. ஏன் நம்மை அந்த இடத்திற்கு அழைத்துப் போக மறுக்கறார்கள் என்று கேள்வி எழுப்புகிற குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் போனது.

இராசபக்ஷே என்ற இட்லரைக் கண்டு நடுங்குகிறவர்கள் இவர்கள். களத்தில் உள்ளே அனுமதிக்காது, தான் வழங்குகிற செய்திகளை மட்டுமே ஊடகங்களைப் பேசவைத்தது அரச பயங்கரவாதமெனில், அதை அப்படியே வாய்பொத்தி ஏற்று,வெளியிட்டது ஊடக பயங்கரவாதம்.

அக்னி நட்சத்திர நாளில் காற்றேயில்லாது அமுங்கிக் கிடக்கிறது காலைப் பொழுது. எதனையும், எல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்ளும் வெப்பம் கண்திறந்து வருகிறது. ஓரிருநாள் இயற்கையை தாங்கிக் கொள்ள மாட்டாமல் இங்கு தமிழினம் புரளுவதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. அங்கு கஞ்சியில்லாமல்,தண்ணீரில்லாமல், காயத்துக்கு மருந்தில்லாமல், இயற்கையின் எந்த வேற்றுமையையும் உணரக் கூடாமல் பைத்திய மனோநிலையில் ஒடுக்கிவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கூட்டத்தின் கதி என்ன? எதையும் உணரமுடியாத பிணங்கள் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும். உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்”.

இந்தப் பிரச்னையைப் பேசுகிற, அலசுகிற, மனித சுபாவமே இல்லாத ஊடகங்களைப் பற்றி ராஜிவ் டோக்ரா என்ற முன்னாள் இந்திய ராஜதந்திரி இவ்வாறு பேசுகிறார். எவருக்கு கண்களும் காதுகளும் உண்டோ, அவரே உலகின் மற்ற காதுகளுக்கும் கண்களுக்கும் மனித அவலத்தைக் கொண்டு போக முடியும். ஒரு நாளில் 25 ஆயிரம் மனித உயிர்கள் மரித்ததை, இதனினும் கூடுதலாய் லட்சக் கணக்கில் பட்டினிச் சாவுக்குள் போவதை - இவர் மரணம், அவர் மரணம் என்று இட்டுக்கட்டிய பரபரப்புக்குள் எளிதாய்த் தூக்கி எறிந்து விட்டுப் போக முடிந்தது ஊடகங்களால்..

சிங்கள இனவாதம் என்ற ஒரு வஸ்து நூற்றாண்டு காலமாகச் செயல்பட்டு வருவதையே மறுக்கும் தி ஹிண்டு வின் (வுhந ர்iனெர னுயடைல) மூடத்தனத்தைக் கண்டிக்க சொற்களே இல்லை. கருத்துச் சுதந்திரம் என்பது ஈனத்தனமான கருத்துக்களையும் பரப்பும் சுதந்திரம் தான் என்பதை உணர்ந்து பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய காலகட்டம் இதுஎன்று காலச்சுவடு மார்ச் 2009 - இதழ் தலையங்கத்தில் எழுதப் பட்டிருப்பது இந்து நாளிதழை பற்றியது மட்டுமேயல்ல.

சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் இருந்த நிலையில் இன்று ஈழத் தமிழர்கள் விடப் பட்டிருக்கிறார்கள். மூச்சுப் பரியாமல் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகயுத்தத்தின் பின் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் பாதுகாப்பு அளிக்க, அமெரிக்க உதவியோடு இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் இருந்த பூமியை இழந்திருக்கிறார்கள்.

ராஜிவ்டோக்ரா சொல்வது போல இலங்கை எனும் சின்னஞ்சிறு பகுதியில் என்ன நடக்கிறது என்று கவனம் செலுத்தியிருக்கவேண்டும். கவனம் செலுத்த வைக்கிற காரியத்தை ஊடகங்களும், அரசியல் ஆய்வு அறிஞர்களும் செய்ய தவறியிருக்கிறார்கள். தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்கிற வேலைக்கு பல சக்திகள் முயன்னின்றிருக்கின்றன. ஒரு இனவிடுதலைப் போரின் பின்னடைவை முன்னெடுப்பதில் பல சக்திகளும் தீவிரமாய முனைந்தார்கள்.

1. அனைத்துக் கட்சிகளின் அக் - 14 துரோகம்

15 - நாளில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்தவில்லையென்றால் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றிய போது காட்டிய வீரம் செயல் முறைக்குக் கொண்டுபோவதில் வெளிப்படவில்லை. முடிவு செயலாகியிருந்தால், ஈழத் தமிழரின் மண்ணில் வெளிச்சத்தின் விதை ஊன்றப்பட்டிருக்கும். முதல் பதவி விலகல் கடிதத்தை தன் மகள் கொடுக்க, பிறகு ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் தந்த கடிதங்களை - மக்களவைத் தலைவருக்கு அனுப்பாமல் தானே சேகரித்து வைத்துக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் அக்டோபர் 14 - துரோகம் அது.

அரசியல் வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கிறான்; அறிஞர்கள் அடுத்த தலைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்என்று சொல்லப்படுகிற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. எதிர்வரும் தலைமுறைகளின் வாழ்வொளியில், தடையாய்ப் பரவும் இருட்டை முன்கூட்டி விலக்கும் தத்துவம், செயல்முறைச் சாதனைகளுக்குரிய அறிஞர்களை தலைமுறைகளின் தலைவர் எனக் குறிப்பிடுவார்கள். அரசியல் வாதியையும் அவ்வாறு குறிப்பிடமுடியும். அவர் பத்துத் தலைமுறைகளுக்குக் சொத்துச் சேர்த்துவைத்திருக்கிறார். ஆகவே தலைமுறைகளின் தலைவர் என்று கூறிக் களிப்படையலாம். இந்த அர்த்தத்தில் கருணாநிதியும் தலைமுறைகளின் தலைவராக முதலிடம் பிடிக்கிறார்.

2. இந்தியா, இந்தியா, இந்தியா

தேசிய இனப்பிரச்னை என்ற சோற்றுப் பானையை இந்தியா கழுவிக் கவிழ்த்து வைத்து அரைநூற்றாண்டுக் காலம் கடந்து விட்டது. தேசிய இனங்களின் உரிமைகளுக்கு முகம் கொடுத்தறியாத இந்தியா, அண்டையிலுள்ள ஈழத்தமிழர் இனவிடுதலைக்காக குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏறத்தாழ அனைத்து நாடுகளும், இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்த போது,இந்தியாவின் தொண்டைக் குழியிலிருந்து ஒரு சொல்லும் எழும்பவில்லை. தன்னுடைய ஆதிக்க நலன்களுக்கு கட்டுப்பட்ட ஒன்றாக, தனது காலடிக்குக் கீழுள்ள சின்னஞ்சிறு புழுவாகவே வைத்திருக்க விரும்புகிறது. இந்தியாவின் கண்காணிப்புகளையும் மீறி சீனாவும், பாகிஸ்தானும் அந்தச் சின்னஞ்சிறு தீவில் திடமாகக் கால் பதித்துள்ளன. இந்தியாவின் கையை மீறி, அல்லது கையை உதறி சீனாவை, பாகிஸ்தானை தனக்குள் ஏந்த ஆரம்பித்துவிட்ட நிலையில், இலங்கை ஒரு புழு அல்ல் கொட்டும் தேள் என்பது புரிய ஆரம்பிக்கும். ஈழத் தமிழினத்தை அழிப்பதில் எல்லாமுமாய் இருந்ததின் மூலம் தாயகத் தமிழினத்துக்கு முதல் எதிரியாய் மாறியுள்ளது இந்தியா.

3. பாழ்பட்ட உலகு

ஓவ்வொரு நாடும் தனது தேசிய நலன்கள் என்ற நிகழ்ச்சி நிரலிலிருந்து உலக அசைவுளை அளவிடுகிறார்கள். ஒரு நாட்டின் தலைமை சக்தியாய் இயங்கும் ஆளும் வர்க்கக் குழுக்களின் நலன் தான் தேசிய நலனாக இருந்து வருகிறது. ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்கக் கால்கள் பதிந்ததை, அங்குள்ள ஆளும் வர்க்கக் குழுக்களின் பசிக்குத் தீனிபோடும் செயலாகவே காணமுடியும். அது புரட்சிகரப் போராட்டமாக இருக்கட்டும்; இனவிடுதலைப் போராக இருக்கட்டும்;காலனிய ஆதிக்க நுகத்தடிகளிலிருந்து விடுபடுவதாக இருக்கட்டும்;பயங்கரவாதத்துக்கு எதிரான போராகவே ஆளும்வர்க்கங்கள் காண்பார்கள். ஒரு நாடு இன்னொடு நாட்டின் மீது கொள்ளும் நல்லெண்ணம் என்பது, இன்னொரு நாட்டில் எவ்வளவு கைவைக்கலாம் என்ற திட்டமிடுதலில் தான் உருவாகிறது. இலங்கைக்கு உதவிய எல்லா நாடுகளின் முகமும் இந்த ஒரு புள்ளியில் குவிகிறது.

உலகில் எங்கெங்கு மக்கள் விடுதலைப் போர் இனி முளைவிட்டாலும் பயங்கரவாத முத்திரை குத்தி ஒழித்து விடலாம் என்பதற்கு சிங்களப் பேரின இலங்கை முன்மாதிரியாகியிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முழக்கத்தினை 2001, அக்டோபர் 11- க்குப் பின் அமெரிக்கவின் புஸ் முன்வைத்தார். இலங்கையின் இட்லர் அதைக் கையிலெடுத்து வெற்றி கண்டுள்ளார். எது விடுதலைப் போர், எது பயங்கர வாதம் என்று பிரித்துக் காணவேண்டிய பரிதாபத்திற்கு சிந்தனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

4. உண்மைக்கும் மக்களுக்கும் எதிரான ஊடகம்

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டில், 20 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்தன ஊடகங்கள். குறிப்பாக இந்தியாவைத் தாண்டி வெளியே இருக்கிற மேற்குலக ஊடகங்கள் தமது தோளில் சுமந்த பொறுப்பினால் இஸ்ரேலியத் தாக்குதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 20 - நாட்களில் ஒரு இன அடக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவர முடிந்த இவர்களால் - அறவழிப் போராட்டத்தில் 28 ஆண்டுகள், ஆயுதவழிப் போரில் 32ஆண்டுகள் அறுபது ஆண்டுகளாகியும் ஒரு பேரினவெறியை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை எனில் உலக ஊடகங்கள் ஒரு பங்கும் ஆற்றவில்லை என்பது உண்மையாகிறது. அதனால் எதிர் நிலை எடுத்தன என்பதும் பொருளாகிறது. இந்திய ஊடகங்கள் திட்டவட்டமாக எதிர் நிலையைக் காட்டின. அதேநேரத்தில் இந்த இனவிடுதலைப் போரில் படுபாதகப் பங்காற்றின.

மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டநேசனலின் உயர்மட்டக் குழு உறுப்பினராக பணியாற்றியவரும் இல்லினாய்ஸ் பல்கலைகழக பேராசிரியருமான பிரான்சிஸ் அந்தோணி பாய்ல் உலக ஊடகங்கள் இனவேற்றுமை பாராட்டியதை பின்வருமாறு அம்பலப்படுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் மீதும் போஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இன வெறி என்றே நான் கூறுவேன். இது தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள்,இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டு கொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் போஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர் - சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.

இந்திய ஊடகங்களும், உலக ஊடகங்களும் அவர்களுக்குரிய பங்கையும் இனவேற்றுமை அடிப்படையில் வெளிப்படுத்தியதன் காரணமாக முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் 25 ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டதற்கும்,முட்கம்பி வேலிகளுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டதற்கும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள். அவரவர் தன்னலன்கள் அடிப்படையில்,விடுதலைப் போரின் பின்னடைவை விரைவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இப்போது ராஜீவ் டோக்கராவின் கேள்வியை மீண்டும் கேட்போம்.

மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும்.

ஆன்மா செத்துப்போனவர்கள் யார்?

ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது

பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000 இல் The International History Review இதழில் பாய்ல் எழுதிய Foundation of World Order : The Legalist Approach to International Relations (1898-1922) எனும் கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.

உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர்நேஷனலின்' உயர்மட்டக் குழு இயக்குநராக பாய்ல் பணியாற்றியுள்ளார். பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கும், பாலஸ்தீனத்தின் தற்காலிக அரசுக்கும் இவர் ஆலோசகராக இருக்கிறார். பாஸ்னியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம் இன அழிப்புக்குக் காரணமான மிலோசெவிச்சுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் வாதாடி, பாஸ்னிய மக்களுக்கு நீதி கிடைக்க காரணமாக இருந்தவர். "உயிரியியல் ஆயுதங்கள் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் 1989'–அய் அமெரிக்க அரசுக்காக தயாரித்து கொடுத்தவர். இச்சட்டம் ஜார்ஜ் புஷ் அரசால் அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டவடிவம் பெற்றுள்ளது.

இலங்கையில் நடைபெறுவது உள்நாட்டுப் போரல்ல; திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை ஆதாரப்பூர்வமாக உலக அரங்கில் இடையறாமல் வலியுறுத்தி வரும் பிரான்சிஸ் பாய்ல், "தமிழ்நெட்' இணையத்தில் இது தொடர்பாக விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். தற்பொழுது "நாடு கடந்த தமிழீழ அரசின்' ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பாய்ல், "தலித் முரசு'க்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள சிறப்புப் பேட்டியிலிருந்து...

பேட்டி : மாணிக்கம்

தற்பொழுது மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கை அரசின் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கும்போது, அய்க்கிய நாடுகள் அவை போன்ற பன்னாட்டு உரிமை அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக அவை தலையிட வேண்டும். 1948 இன் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் படியும், 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின் படியும், இப்பிரச்சனையில் தலையிடுவதற்கு அய்க்கிய நாடுகள் அவை கடமைப் பட்டுள்ளது. ஏற்கனவே பல நேரங்களில், அய்.நா.வும், உலக நாடுகளும் தலையிட்டு முகாம்களில் இருக்கின்ற மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை பற்றி தொடர்ச்சியாக பேசி யும், எழுதியும் வந்திருக்கிறேன். இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதை முகாம்களைப் போன்ற மரண முகாம்களாக இருக்கின்றன!

“இலங்கையில் போர் முடிந்துவிட்டது'' என்று இலங்கை ராணுவம் தன்னிச்சையாக அறிவித்த பின்பும் உலக சமூகமும், ஊடகமும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கு இருப்பவை "மரண முகாம்கள்' என்று நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கை ஒரு பாலஸ்தீனமாகவோ, மேற்கு அய்ரோப்பிய நாடாகவோ இருந்திருந்தால், உலக ஊடகங்கள் இவ்வாறு அமைதி காத்திருக்குமா?

பாலஸ்தீனத்தின் மீதும் பாஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக, அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இனவெறி என்றே நான் கூறுவேன். தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டுகொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் பாஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர்-சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், இலங்கைத் தமிழர்கள் பற்றி அவை கூறாததற்கு இனவெறியே காரணம். தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.

இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டபோது, உலக ஒழுங்கு வேறு மாதிரியாக இருந்தது. வெகுசில வல்லரசுகள் மட்டுமே இருந்தன. அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப உலகம் இயங்கியது. இன்று பல வல்லரசுகள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆசியாவில் குறிப்பாக, இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ளன. இப்போதைய சூழ்நிலைகளில் இஸ்ரேல் போன்றதொரு தீர்வு தமிழ் மக்களுக்கு சாத்தியமா?

மிகச் சரியாகக் கூற முடியவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இரட்டைக் கோபுர தாக்குதலான செப்டம்பர் 11க்குப் பிறகு புஷ் நிர்வாகத்தின் கீழ் அனைத்துமே மாறிவிட்டன. அண்மையில் நடைபெற்ற சோக நிகழ்வாக, இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் கூறியுள்ளார். இது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 30 ஆயிரம் தமிழர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அவர்கள் செயல்படப் போகிறார்கள். சீனா இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் இலங்கையுடன் நட்பு பாராட்டுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழர்கள் கிளர்ந்தெழுந்து, இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த இனப்படுகொலையின் போது நிகழாத அது இப்போது முதல் நிகழ வேண்டும்.

இந்திய அரசு தன் நிலையை மாற்றி ஏதேனும் செய்ய முயன்றால், அமெரிக்கா அதற்கும் மேலாக செய்யும். சீனாவுடன் இலங்கை நெருக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்திய அரசின் சிந்தனையில் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தால், அமெரிக்காவும் ஏதேனும் செய்ய முயலும். இந்திய அரசு ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது படுபயங்கரமானது. நாஜி படைகளால் யூதர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் போல, இலங்கைத் தமிழ் மக்கள் அனுபவிக்கிறார்கள். உலகமே கண்களை மூடிக் கொண்டு விட்டது. நாம் இந்தப் பேட்டியை தொடங்கிய நேரம் முதல் இந்த 10 நிமிடங்களில் 10 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய நிலைகளைப் பார்க்கும்போது, இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் இலங் கைத் தமிழர் பிரச்சனையை கை கழுவி விட்டது போன்றே தோன்றுகிறது.

இலங்கை இனப்படுகொலையின் இறுதிக் கட்ட கள நிகழ்வுகள் பற்றி அறிய, உலகமே இலங்கை ராணுவத்தின் பிடியில் இருந்த மருத்துவர்களைத்தான் நம்பி இருந்தது. கடைசியில் ஊடகங்கள் முன் கொண்டு வரப்பட்ட மருத்துவர்களும், இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்தையே தங்கள் செய்தியாக சொன்னார்கள். இந்நிலையில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கிறதா?

அது உங்களிடம், என்னிடம், செய்தி ஊடகங்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் ஆறரை கோடி தமிழ் மக்களின் கைகளில்தான் உள்ளது. உண்மைகளை வெளிக் கொண்டு வருவது நம்மைச் சார்ந்து இருக்கிறது. போரின் இறுதிக்கட்ட காலத்தில், உண்மையிலேயே சில நல்ல ஆதõரங்கள் இருந்தன. இப்போது பொய்களின் மூலமும், ஏமாற்றி மூடி மறைப்பதன் மூலமுமே-விமர்சகர்கள் அனைவரும் இலங்கை அரசால் அடக்கப்பட்டு விட்டார்கள். இதே போன்றதொரு நிலைதான் யூதர்கள் அழிக்கப்பட்ட காலத்திலும் இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு நாஜிகளின் கொடுமைகள் தெரிந்த போதும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இப்போதும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று அமெரிக்காவுக்குத் துல்லியமாகத் தெரியும். எனினும் மவுன சாட்சியாக உலகம் இருப்பதால், தமிழினப் படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

போரில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி இலங்கையை பாராட்ட விழுந்தடித்து ஓடி வந்த நாடுகள், இப்போது "போர் முடிந்து' மூன்று மாதங்களாகியும் இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் குறித்து எதுவுமே பேசவில்லையே?

அவற்றிற்கு தமிழ் மக்கள் குறித்த எந்த அக்கறையும் இல்லை. அதனால்தான் பிப்ரவரி-மே மாதங்களுக்கு இடையில் ராஜபக்சேவினால் நிகழ்த்தப்பட்ட 50 ஆயிரம் தமிழர் படுகொலையை எதிர்த்து எதுவும் பேசவில்லை. படுகொலையை நிறுத்தக் கோரி துரும்பைக்கூட அசைக்கவில்லை. இப்போது பன்னாட்டு நிதியத்தின் (ஐMஊ) கடனும் இலங்கைக்கு கிடைக்கப் போகிறது. இது குறைந்த பட்சம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ஒப்புதல் இன்றி சாத்தியமே இல்லை. அவர்கள்தான் அதை கட்டுப்படுத்துகிறார்கள். வல்லரசுகளைப் பொருத்தவரை, 50 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. இது, இனவெறியன்றி வேறு எதுவும் இல்லை. 1930களிலும் இரண்டாம் உலகம் போர் காலத்திலும் யூதர்கள் மீதான எண்ணமும் இதுபோலத்தான் இருந்தது. போர் முடிந்த பிறகுதான் யூத இனப்படுகொலை பற்றி உலகம் உணரத் தொடங்கியது. ஆனால் அவை மிகவும் தாமதமாக நிகழ்ந்ததால் எல்லாம் பயனற்றுப் போனது.

உலக நாடுகளுக்கு அக்கறை இல்லை என்றால், இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கவும் அவசியமில்லையே?

நான் சொல்வது, அவர்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை. இலங்கையின் பூகோள நலன்களை தங்களுக்கு சாதகமாக்க அக்கறை உண்டு. தங்களின் வர்த்தக நலன்களுக்கு இலங்கையின் துறைமுகங்களை யும் நிலப்பரப்புகளையும் மற்றும் தென்னிந்தியத் துறைமுகங்களையும் பயன்படுத்திக் கொள்வதில் அக்கறை உண்டு.

இலங்கைத் தமிழர்கள் பலம் கொண்டிருந்த போதும், தங்களுக்கென்று வலிமையான பிரதிநிதிகள் இருந்த போதும்-அவர்களின் நியாயமான நல்வாழ்வை உறுதிப்படுத்தாத இலங்கை அரசு, இப்போது அவர்கள் வலுவிழந்து, மேய்ப்பன் இல்லாதது போன்ற நிலையில் பரிதவிக்கும்போது-அவர்களின் உரிமைகளையும், விருப்பங்களையும் அரசு நிறைவேற்றுமா?

நிச்சயமாக நிறைவேற்றாது. உண்மையில் அவர்களை முற்றிலுமாக அழித் தொழிக்கும் வேலையிலேயே அது ஈடுபட்டுள்ளது. போர் வெற்றி மனநிலையில் இருக்கும் அவர்கள், இப்போதும் முகாம்களிலேயே தமிழர்களை வைத்திருக்கிறார்கள். உண்மையில் 300 தமிழர்களுக்கு 1,400 சிங்கள போலிஸ் என்ற விகிதத்தில் நிலைமை இருக்கிறது. இது, இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கும் எதிரானது. திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு குழுவை அழிக்க நினைப்பதும், இன்று இலங்கையில் நாம் பார்ப்பதும் தமிழ் இன அழிப்பே. அதை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

வல்லரசு நாடான அமெரிக்கா, இலங்கையின் இறுதிக்கட்ட இன அழிப்புப் போரின் போது எடுக்கப்பட்ட (மிக முக்கிய ஆதாரமான) செயற்கைக் கோள் படங்களை வெளியிட மறுப்பது ஏன்?

செயற்கைக் கோள் படங்களை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்காவுக்குத் தெரியும். இலங்கையின் கனரக ஆயுதங்கள், பீரங்கி மற்றும் விமானங்கள் தமிழர்களைத் துண்டாடியதை உலகமே பார்த்தது. பாஸ்னியா போரிலும் அமெரிக்கா இவ்விதமாகவே நடந்து கொண்டது. அமெரிக்க செயற்கைக் கோள்கள் எப்போதும் பாஸ்னியாவை சுற்றியே இருந்தன. பாஸ்னியாவில் என்ன நடந்தது என்பது அவற்றில் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். ஆனாலும் அவை வெளியிடப்படவில்லை. அமெரிக்கா வெளியிடாது. ஏனென்றால், மக்கள் கோபமுற்று அதனிலும் பெரிதாக ஏதேனும் செய்து அமைதிக்கு வழிவகுக்க நிர்பந்திப்பார்கள் என்பதால்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்கா எதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளதா?

என்னைப் பொருத்தவரை, அமெரிக்கா ராஜபக்சேவையே ஆதரிக்கும். அண்மையில் பன்னாட்டு நிதியத்தின் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளதே அதற்கு சான்று. அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துடன் அமெரிக்கா பேசி வந்தது. அமைதிப் பேச்சு வார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை. அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டியது, இலங்கையில் நடப்பது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதைத்தான். இப்போது அமெரிக்கா இனப்படுகொலையை அங்கீகரிக்க மறுப்பதன் காரணம் இதுதான் : அப்படி அங்கீகரித்தால் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் முதலாம் சட்டப்பிரிவின்படி-இனப்படுகொலையைத் தடுக்கவும், நிறுத்தவும் அது கடமைப்பட்டதாகி விடும். அதை செய்ய அமெரிக்காவுக்கு விருப்பமில்லை. இதுதான் பாஸ்னியாவிலும் நிகழ்ந்தது. ஒரே ஆறுதல் (வேறுபாடு) பாஸ்னியா மீது உலக ஊடகங்கள் பார்வையை செலுத்தின.

புலம் பெயர்ந்த தமிழர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசை' நிறுவுவது பற்றி சிந்திக்கிறார்கள். நாளை உள் நாட்டிலோ, வெளிநாட்டிலோ "தமிழீழம்' என்றொரு நாடு பிரகடனப்படுத்தப்பட்டால், அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

நான் ஏற்கனவே சொன்னபடி, அமெரிக்கா அது குறித்து எந்த அக்கறையும் காட்டாது. குறிப்புகளின்படி, ராஜபக்சே ஒரு தலைப்பட்சமாக முறித்த அமைதி ஒப்பந்தம் நடப்பில் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா திரைக்குப் பின்னால் தொடர்பு கொண்டிருந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான பார்வை மாற்றப்பட்டபோது, அமெரிக்கா ராஜபக்சே அரசாங்கத்தை ஆதரிக்கத் தொடங்கியது.

அரை நூற்றாண்டிற்கும் மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க முடியும்?

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியல் தீர்வுகள் இவ்வாறாக இருக்கலாம் : 1. தங்களுக்கென்று சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தனி நாட்டை உருவாக்கிக் கொள்வது 2. ஒரு சுதந்திர நாட்டுடன் இணைந்து செயல்படுவது 3. மக்களால் தீர்மானிக்கப்படும் வேறு அரசியல் நிலைப்பாடுகள். இவற்றில் எதுவாக இருந்தாலும், அது இலங்கைத் தமிழர்களாலேயே தேர்வு செய்யப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமோ, நானோ அல்லது இந்தியாவில் வாழும் தமிழர்களோகூட எந்தத் தீர்வையும் சொல்ல முடியாது. பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிடாததற்கு சொல்லும் காரணம், இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை, தான் அங்கீகரித்தால், இந்தியாவில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதைப் போல் தனி நாடு கேட்டுப் போராடுவார்கள் என்பதே. இது, பன்னாட்டுச் சட்டங்களின்படி ஒரு பொய்யான இரட்டை கூறு நிலை. எனவே இவ்வாறான காரணத்தைச் சொல்லி, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறுவது இந்தியாவுக்கு இழுக்கு.

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு "மக்கள் குழு'வினர். எனவே, சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின்படி (International Covenant on Civil and Political Rights), இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெறத் தகுதியானவர்கள் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கென்று தனியாக ஒரு மொழி, இனம் மற்றும் மதத்தைக் கொண்டிருக்கும் மக்கள். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கை அரசு தமிழ் இன அழிப்பில் ஈடுபடுகிறது.

இன்னும் தெளிவாக சொல்கிறேன். இலங்கையும் கையெழுத்திட்டுள்ள சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பன்னாட்டு சட்டங்களின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த உரிமை யின்படி, அவர்கள் சுதந்திரமாக தங்கள் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

மனிதரைப் பற்றிப் பேசலாமா பிணந்தின்னிக் கழுகு?

இடைத்தங்கல் முகாம் என்ற பெயரில் ராஜபட்சேவின் இனவெறி அரசு அமைத்துள்ள திறந்தவெளிச் சிறைச்சாலைகளில், கம்பிவேலிகளுக்குப் பின் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகிவருகிறது. வாரத்துக்கு 1400 பேர் இறந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது இலண்டனிலிருந்து வெளியாகும் "டைம்ஸ்" பத்திரிகை.

இந்த வேகத்தில் போனால் மொத்த சனமும் செத்து முடிக்க நீண்டகாலமாகாது. நாளைக்குப் பிணமாக்குவதற்காக இன்றைக்கு தமிழர்களுக்கு நடைப்பிணப் பயிற்சி அளிக்கிறது சிங்கள அரசு. மருந்து மாத்திரை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. குடிநீருக்காக கியூவில் நிறுத்துகிறது. சோற்றுக்காகக் கையேந்த வைக்கிறது. பசியோடுகூட கியூவில் நின்றுவிடலாம் அவசர அவசரமாக கழிப்பறைக்குப் போகும்போது கியூவில் நிற்கச்சொன்னால் எப்படியிருக்கும்?

ஆனால், அப்படித்தான் நிற்கச்சொல்கிறது இலங்கை. வேறு வழியில்லாமல் அதற்கும் கியூவில் நின்று கொண்டிருக்கிறார்கள். தங்களது இனம் அழிக்கப்பட்டதைப் பொறுக்கமுடியாமல் போராடிப்பார்த்த தமிழர்கள். பல ஆயிரம் பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையில் தங்களது உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முகாமில் மனநோய்க்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இந்த கழிப்பறை பிரச்சினை முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். இதைப்பற்றியெல்லாம் கேள்விகேட்க நாதியில்லாமல் கேடுகெட்ட சர்வதேசத்துடன் சேர்ந்து மௌனம் சாதிக்கும் கூறுகெட்ட தமிழர்களாகத் தலைகுனிந்து நிற்கிறோம் நாம்.

நம்முடைய இந்த பேடித்தனம் தான் கொலைகார ராஜபட்சேவைக் கூசாமல் பேசவைக்கிறது. 'எனது குடும்பம் தமிழர்களுடன் திருமணம் செய்துள்ளது'என்றுகூட பேட்டிகொடுக்க முடிகிறது. இதே வசனத்தை இங்கேயும் கேட்டமாதிரி இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. எல்லா நாட்டிலும் அப்பாவி மக்களின் தலை பூண்டு நசுக்கத்தான் பயன்படுகிறது.

தான் ஒரு சர்வாதிகாரி அல்ல என்று வாதிட ராஜபட்சே முன்வைத்த வாதம்தான் இந்தப் பேட்டியின் மிகக் கொடுமையான பகுதி. 'எனது அரசாங்கத்தைப் பற்றிய கடும் விமர்சனமொன்று அதை எழுதிய பத்திரிகையாளரின் மறைவுக்குப் பின் இலங்கைப் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டது. அதையே அனுமதித்தவன் நான்' என்கிற தொனியில் பெருமையடித்துக்கொண்டிருப்பது ராஜபட்சேவின் வக்கிர மனோபாவத்துக்கு சான்று.

ராஜபட்சே குறிப்பிடும் அந்தப் பத்திரிகையாளர் லசாந்த விக்கிரமதுங்க. பிறப்பால் சிங்களர். போரின் பெயரால் அப்பாவித் தமிழர்கள் பழிவாங்கப்படுவதைத் தட்டிக்கேட்ட பத்திரிகையாளர். சென்ற ஜனவரி 8ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட லசாந்த மகிந்த ராஜபட்சேவின் 25 ஆண்டுக்கால நண்பன். அவரைக் கொன்றது ராஜபட்சே கும்பல்தான் என்று ஒட்டுமொத்த பத்திரிகை உலகும் குற்றஞ்சாட்டியது.

அந்தக் கொலையைக் கண்டிக்காத நாடு அநேகமாக இந்தியாவாகத் தான் இருக்கும். (ஹிந்து பத்திரிகை அதைக் கண்டித்ததா என்பதுபற்றி நமக்குத் தகவல் இல்லை.) லசாந்த மட்டும் இப்போது இருந்திருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் முகாமின் நிலவரத்தை உள்ளது உள்ளபடி எழுதி ராமையெல்லாம் ஆயாராம் காயாராம் ஆக்கியிருப்பார். விசுவாசிகள் யாரும் அம்பலமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் லசாந்தவைத் தீர்த்துக்கட்டியது ராஜபட்சேக்களின் அரசு இயந்திரம்.

லசாந்த "லீடர் குரூப் பப்ளிகேஷன்" வெளியிடும் "சன்டே லீடர்" பத்திரிகையின் முதன்மை ஆசிரியர். சிரிமாவோ காலத்திலிருந்தே மகிந்தவுடன் பழகியவர். மகிந்த என்று உரிமையோடு அழைத்தவர். எந்த அரசாங்கமாயிருந்தாலும் அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்காத லசாந்த மகிந்தவின் தவறுகளை ஊழல்களைத் தட்டிக்கேட்கவும் தவறவில்லை.

பிரபலமான ஹம்பன்கோடா ஊழலை அம்பலப்படுத்தி மகிந்தவின் சுயரூபத்தை வெளிப்படுத்தியவர் அவர். புலிகளுக்கு அஞ்சி கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையில் 500 மில்லியன் செலவில் அதிநவீன பாதாள அறை அமைக்கப்படுவது பற்றி லசாந்த எழுதிய புலனாய்வுக் கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனாலெல்லாம் நீண்டகால நண்பரான அவர் மகிந்த சகோதரர்களின் ஒன்றாம் நம்பர் எதிரி ஆகிவிட்டார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே லசாந்தாவைப் போட்டுத்தள்ள முயற்சி நடந்தது. 2 முறை தாக்கப்பட்டார். ஒருமுறை அவரது வீடு துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டது. மயிரிழையில் உயிர்தப்பினார். கொல்லப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்கூட அவரது நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பிவந்த எம்.டி.வி. என்கிற மகாராஜா டெலிவிஷன் நெட்வொர்க் அலுவலகமும் ஸ்டூடியோவும் சூறையாடப்பட்டன.

ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார் லசாந்த. அதற்காக தனது பத்திரிகைக் கடமையிலிருந்து ஓரங்குலம் கூட விலகவில்லை. அப்பாவித் தமிழர்கள் மீது போரைத் திணிக்காதே என்று துணிவுடன் எழுதினார்.

தமிழர் பிரச்சினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது வரலாற்றின் அடிப்படையில் தான் பார்க்கவேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தினார்.

எப்போதும் போல இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியும் மரணம் அவரை விரட்டியது. காலையில் அலுவலகத்துக்குப் போகும் வழியில் தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தவர்களைக் கவனித்ததும் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் லசாந்த கொடுத்தார் லசாந்த. அது அநேகமாக அவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று தெளிவாகச் சொன்னார். அதற்குள் சுடப்பட்டார். அன்று பிற்பகல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லசாந்தவும் தமிழகத்தின் தீப்பொறி முத்துக்குமாரும் ஒரே ஜாதி. பத்திரிகையாளர் ஜாதி. முத்துக்குமார் போலவே தனது மரணத்துக்குமுன்பே விரிவான ஒரு வாக்குமூலத்தை எழுதிவைத்திருந்தார் லசாந்த. அந்த மரணவாக்குமூலம் அவர் கொல்லப்பட்ட மூன்றாவது நாள் "சன்டே லீடரில்" வெளியிடப்பட்டது.

சொந்த நாட்டின் மக்களையே விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கை தான். இதை வெளிப்படையாகச் சொல்வதனால் என்னைத் தேசத்துரோகி என்கிறார்கள். இதுதான் தேசத்துரோகம் என்றால் அந்தப் பட்டத்தை நான் பெருமையுடன் ஏற்கிறேன்.....

புலிகளின் மீதான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பது புத்த தர்மத்தைக் கட்டிக்காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிங்கள சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானம் அப்படிச் சொல்லிக் கொள்வதற்காக இலங்கை வெட்கப்படவேண்டும்....

இவையெல்லாம் லசாந்தவின் மரண சாசனத்தில் இடம்பெற்ற வாசகங்கள். போர்க்கள வெற்றி இலங்கை நிலவரத்தை மேலும் மோசமாக்கிவிடும் என்று தீர்க்கதரிசனத்துடன் எச்சரிக்கவும் லசாந்த தயங்கவில்லை.

போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். அதைச் சமாளிப்பது எளிதல்ல! அரசியல் ரீதியாக தீர்வுகாணக் கூடிய ஒரு பிரச்சினை அனைத்துத் தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். மிக வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மை என் நாட்டின் பெரும்பான்மை மக்கள் கண்ணிலும் அரசின் கண்ணிலும் படவேயில்லை. எனது கோபத்துக்கும் சலிப்புக்கும் இதுதான் காரணம் என்றார் அவர்.

உனக்கெதற்கு வம்பு இதையெல்லாம் ஏன் பேசுகிறாய் தேவையில்லாமல் ஏன் விரோதத்தை வளர்த்துக் கொள்கிறாய்.... இப்படியெல்லாம் லசாந்தவைச் சுற்றியிருந்தவர்கள் அவரைக் கேட்டதுண்டு.

லசாந்த அவர்களுக்குச் சொன்ன பதில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்போது நான் பேசாவிட்டால் பிறகு உண்மையைத் துணிவுடன் பேச வேறெவரும் மிஞ்சாமல் போய்விடக்கூடும் என்றார் அவர் உறுதியாக.

இன்றைக்கு லசாந்த மறைவுக்குப் பிறகும் அவரது கட்டுரையை வெளியிட அனுமதித்ததாகச் சொல்லும் ராஜபட்சே உண்மையில் செய்ததென்ன? கொழும்பில் நடந்த லசாந்தவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஜெர்மன் தூதர் ஜர்ஜன் வீர்த் பேச இயலாத நிலையில் இன்று இருக்கிறோம் இதற்குமுன்பே நாம் பேசியிருக்கவேண்டும் இப்போது காலம் கடந்துவிட்டது என்றார். இப்படிப் பேசியதற்காகஇ மறுநாளே தனது வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துக் கண்டித்தது இலங்கை.

லசாந்தவின் மரணவாக்குமூலம் அவ்வளவு கடுமையாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் ராஜபட்சே நிர்வாகம் அதை அனுமதித்திருக்குமா? உண்மை அப்படியிருக்க தான் சர்வாதிகாரியாக இல்லாததால்தான் அதை அனுமதித்ததாக வெட்கமின்றித் தம்பட்டமடிக்க முடிகிறது ராஜபட்சேவால்.

லசாந்த என்கிற மனிதனைப் பற்றி ராஜபட்சே மாதிரி ஒரு பிணந்தின்னிக் கழுகு பேசுவதுதான் கொடுமை. தன்னால் கொல்லப்பட்ட ஒருவன் மூலம் தனக்கு மரியாதை தேடிக்கொள்ள முயல்வது அதைவிடக் கொடுமை. லசாந்த கொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் எந்தப் பலனும் இல்லை.

அதற்கெல்லாம் பிறகும் கொலைகார ராஜபட்சே தலைகனத்துத் திரிவது சர்வதேசத்தின் கையாலாகாத் தனத்தைத் தான் காட்டுகிறது. சர்வதேசம் போல் பான் கீ மூன் போல் மிலிபாண்ட் போல் ஹிலாரி போல் ராஜபட்சேவை ஒப்புக்குக் கண்டிக்கும் கும்பலாக நாமும் மாறிவிட்டிருப்பது மிகப்பெரிய அநியாயம். அவர்கள் யாருக்கும் ஈழத்தில் அணுஅணுவாகக் கொல்லப்படும் இனம் தொப்புள்கொடி உறவல்ல. அப்படியிருந்தால் அவர்கள் அறிக்கை மட்டுமே விடமாட்டார்கள் கொதித்தெழுவார்கள். நாம்.....?

நமது இப்போதைய கடமை, கம்பிவேலிகளுக்குப் பின்னுள்ள நரகத்திலிருந்து 3 லட்சம் உயிர்களை மீட்பது மட்டுமல்ல. இலங்கையின் நாசசக்திகளான ராஜபட்சே சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கடமையும் நமக்கு இருக்கிறது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஓநாய்களைக் கூண்டில் அடைக்காமல் ஆட்டுக்குட்டிகளை வெளியே கொண்டுவர முடியாது கொண்டுவரக் கூடாது.

சர்வதேச நாடுகள் பல இலங்கையின் இனவெறியை பகிரங்கமாகக் கண்டிக்கும் இப்போதைய நிலையில் இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபட்சேக்களை சர்வதேச குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரி நாம் உரக்க முழங்கினாலே போதும். உலகெங்கும் அது எதிரொலிக்கும். அந்தக் குரல் ராஜபட்சே சகோதரர்களைத் தூக்குமேடை வரை அழைத்துச் செல்லும் குரலாக வலுவடையும் என்பது நிச்சயம்.

யுத்தம் நடத்தும் துணிவு வேண்டாம் செத்துக்கொண்டிருக்கும் நமது சொந்தங்களைக் காக்கவும் கொன்று குவித்த கொடுங்கோலர்களைக் கழுவில் ஏற்றவும் சத்தம் கொடுக்கும் துணிவுகூட இல்லாவிட்டால் நாம் இருந்தென்ன இறந்தென்ன? இலவச கலர் டி.வி, இலவச வேஷ்டி-சேலை என்று சகல சௌபாக்கியங்களுடனும் சௌகரியங்களுடனும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நமது எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டிவிட்டது.

அதனால் என்ன பயன்? உலகெங்கும் சிதறிப்போன 35 லட்சம் தமிழர்களைக் கொண்ட ஓர் இனம் தான் தமிழன் என்கிற பெயரையும் தமிழின் பெயரையும் உலகெங்கும் பதிவு செய்ததேயன்றி நாமல்ல. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டியதைத் தவிர வேறென்ன செய்தோம் நாம்?

இந்த நொடியிலாவது ஓர் உண்மையை உணர நாம் முன்வரவேண்டும்...

முகாம்களில் இனிமேல் நிகழும் ஒவ்வொரு மரணத்துக்கும் நமது மௌனம்தான் காரணமாயிருக்கும். முகாம்களில் இனிமேல் நடக்கும் எந்தக் கற்பழிப்புக்கும் எந்தச் சித்திரவதைக்கும் நமது பொறுப்பின்மையும் கோழைத்தனமும்தான் காரணமாயிருக்கும்.

இந்தப் பொறுப்பின்மைக்கும் கோழைத்தனத்துக்கும் முடிவுகட்டுவோம். இனப் படுகொலை செய்த ராஜபட்சேக்களைத் தூக்கில்போடு என்று 7 கோடி பேரும் சேர்ந்து குரல்கொடுப்போம். அவன் இந்தியாவின் நண்பன் அவனைத் தூக்கில் போடச் சொல்வது தேசத்துரோகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டால் லசாந்த வழியில் அந்த தேசத்துரோகி பட்டத்தைப் பெருமையுடன் ஏற்போம்.

தேசம் முக்கியமில்லை எங்கள் தேசிய இனம்தான் முக்கியம் என்று வெளிப்படையாக அறிவிப்போம். வெறும் சோற்றுப்பிண்டமாகவே வாழ்ந்துகொண்டிருந்தால் நாமும் ஒருநாள் கழிவறைகளுக்கு முன் கியூவில் நிற்கவேண்டியிருக்கலாம். இப்போது பேசவேண்டியதைப் பேசத் தவறினோமென்றால் அப்போது நமக்காகப் பேச எவரேனும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

-

வளமான ஆசியாவின் எதிர்காலத்தை நோக்கிய சீனாவின் அடுத்த பயணம்

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு சிறீலங்கா அரசு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காது விட்டால் சிறீலங்காவில் மீண்டும் ஆயுத மோதல்கள் உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சருமான றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகின்ற போதும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது மேற்குலகத்தை பெரும் விசனமடைய வைத்துள்ளது. சிறீலங்காவில் மோதல்கள் நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என அரசு ஆலோசனை செய்த விடயங்களும் தூக்கி எறியப்பட்டுள்ளன.

280000 தமிழ் மக்கள் உதவி நிறுவனங்களின் தொடர்புகள் அற்ற முறையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மீண்டும் சிறீலங்காவில் போரை ஆரம்பிப்பதற்கே வழிவகுத்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த பினான்ஸியல் ரைம்ஸ் (Financial Times) என்ற நாளேடும் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வேண்டிய முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் தென்னிலங்கையில் இல்லை எனவும், காலம் காலமாக ஆட்சிபுரிந்த சிறீலங்கா அரசுகள் அவர்களை ஒரு இனவாத சிந்தனைக்குள் தள்ளிவிட்டுள்ளதாகவும், இந்த புறச்சூழல்களின் மத்தியில் மத்திய அரசிடம் அதிகாரங்களை ஒப்படைத்துவிட்டு அதிகாரப்பரவலாகம் என்ற அதிகாரமற்ற ஆட்சியை தமிழ் மக்கள் அமைக்க முடியாது எனவும் விடுதலைப்புலிகள் தொடர்ந்து கூறி வந்ததன் அர்த்தங்கள் தற்போது மேற்குலகத்திற்கு புரிந்திருக்கும்.

அவற்றின் வெளிப்பாடுகளாக தான் அண்மையில் மேற்குலகத்தின் சில நகர்வுகள் அமைந்துள்ளன. சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைகள் வேண்டும் என பிரித்தானியா நாடாளுமன்றத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த அழுத்தங்கள் எல்லாவற்றையும் மீறி தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசு இந்தியாவின் ஆதரவை தான் அதிகம் எதிர்பார்த்துள்ளது.

வடக்கு - கிழக்கில் கால்பதிப்பதன் மூலம் தென்னிலங்கையில் கால்பதித்துள்ள சீனாவின் ஆதிகத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம் என இந்தியாவும் நம்புகின்றது. ஆனால் இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவை 20 தொடக்கம் 30 நாடுகளாக உடைப்பது எப்படி என்ற திட்டங்களை சீனாவின் கொள்கைவகுப்பாளர்கள் வகுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவை சிறு சிறு நாடுகாக உடைப்பதன் மூலம் வளமான ஆசிய பிராந்தியத்தை உருவாக்க முடியும் என சீனா நம்புகின்றது. சிறீலங்காவில் அண்மையில் நடைபெற்ற மிகப்பெரும் படுகொலைகள் மற்றும் மோதல்களை தொடர்ந்து மேற்குலகமும் அந்த நிலைப்பாட்டை தான் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

இந்த நிலைப்பாட்டில் மேற்கலகத்தின் பூகோள அரசியல் சமன்பாடுகளும் பொதிந்துள்ளன. அதாவது சோவியத்தின் வீழ்ச்சி தொடக்கம், யூகோஸ்லாவாக்கியாவின் உடைவு வரையிலும் அவர்கள் பயன்படுத்திக்கொண்ட உத்திகளை தான் ஆசிய பிராந்தியத்திலும் பயன்படுத்த முற்பட்டு வருகின்றனர். அதாவது முதலில் இந்தியாவின் உடைவை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம் தமக்கு சார்பான சில நாடுகளையாவது உருவாக்கிவிடுவது அதன் பின் அங்கு கால்பதிப்பதன் மூலம் சீனாவை அச்சுறுத்துவது.

அதனை தான் மேற்குலகம் மறைமுகமாக சாதிக்க முற்படுகின்றது. இந்தியாவின் ஊடாக சிறீலங்காவை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தென்ஆசியாவில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியும் என அமெரிக்கா முன்னர் கருதிக் கொண்டது. ஆனால் ஈழத்தமிழ் மக்களின் விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம் அந்த நம்பிக்கையை சிதறடித்துள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா தற்போது ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி பேணி வருகின்றது. ஈழத்தமிழ் மக்களை ஆதரிப்பதன் மூலம் தென்ஆசியாவில் இழந்துபோன தமது ஆதிக்கத்தை மீண்டும் தக்கவைக்க முடியும் என அமெரிக்கா நம்புகின்றது. சீனாவை பொறுத்தவரையில் அது தனது வளர்ச்சிக்கு முன்னர் அமெரிக்கா பின்பற்றிய அதே நடைமுறைகளை தான் சத்தமின்றி பின்பற்றி வருகின்றது.

அதாவது முதலில் தமது பிராந்தியத்தில் உள்ள தனக்கு ஆதரவான நாடுகளில் அமைதியை தோற்றுவிப்பது. அதாவது அமைதியான நாடுகளின் கூட்டணியை அமைப்பது. அதன் பின்னர் தனக்கு சவாலாக மாறும் நாடுகள் என கருதும் நாடுகளை பல நாடுகளாக துண்டாடி விடுவது. சிறீலங்காவில் நடைபெற்ற மோதல்களை வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டுவந்த சீனாவின் தத்துவம் தற்போது அதன் அடுத்த கட்டத்திற்கு நகரப்போகின்றது.

இந்தியாவை சிறிய நாடுகளாக உடைப்பது என்ற சீனாவின் கோட்பாட்டு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்ற கேள்விகளும் உண்டு. அதாவது சீனா நினைப்பது போல அது சுலபமானதா? இந்தியாவின் அரசியல் - கலாச்சார உட்கட்டுமானங்களை நோக்கும் போது அது சுலபமானது என்ற முடிவுக்கே பல ஆய்வாளர்கள் வருகின்றனர். ஏனெனில் அங்கு கஷ்மீரிலும், நாகலாந்திலும் பிரிவினைக்கான உந்துதல்கள் உள்ளன. ஏற்கனவே பிரிவினைக்கான போரை ஆரம்பித்து பின்னர் அடங்கிப்போன சீக்கிய மக்களின் அடிமனதிலும் விடுதலை வேட்கை உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரையில் அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமது அதிகார சுகத்திற்காக மத்திய அரசை நம்பி வாழ்ந்தாலும், தமிழ் மக்களிடம் ஒன்றுபட்ட இந்தியா என்ற நம்பிக்கையின் வலு குறைந்துவிட்டது. அவர்கள் தம்மை ஒரு இரண்டாம் தர பிரஜைகளாகவே எண்ணதலைப்பட்டுள்ளதாக தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஈழத்தமிழ் மக்களிற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அண்மைக்கால நடவடிக்கைகள் உலெகெங்கும் பரந்துவாழும் பல இலட்சம் ஈழத்தமிழ் மக்களினதும், உலகில் பரந்து வாழும் பல கோடி தமிழ் மக்களினதும் ஒட்டுமொத்த வெறுப்பை இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளது.

இந்தியாவை நோக்கி ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கோபமும் திரும்பியுள்ள இந்த சமயத்தில் இந்தியாவின் வீழச்சியை விரைவுபடுத்த முடியும் என சீனாவும் சரி மேற்குலகமும் சரி நம்புகின்றன போலும். சீனாவின் இந்த கருத்து எவ்வளவு தூரம் சரியானது என்பது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரின் கருத்துக்கள் கடந்த வாரம் திரட்டப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த முடிவுகள் ஆச்சரியமானவை. அதாவது இந்தியாவை பல நாடுகளாக உருவாக்குவதன் மூலம் வளமான ஆசியாவை உருவாக்க முடியும் என சீனா கருதுவதற்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களுக்கும் ஒரு வளமான எதிர்காலத்தை அது உருவாக்கும் என்பதே பெரும்பாலனவர்களின் கருத்தாக அமைந்திருந்தது.

அதாவது இந்தியாவை சுற்றி அதற்கு பாதகமான ஒரு புறச்சூழலை சீனா உருவாக்கி விட்டது. மேலும் தென்ஆசியா பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய பல ஆசிய நாடுகளுக்கும் "வளமான ஆசியா" என்ற சீனாவின் சொற்பதம் ஊக்க மருந்தாகவே தோன்றும். இதனிடையே விடுதலைப்புலிகள் முறியடிக்கப்பட்டுவிட்டனர் என்ற சிறீலங்கா அரசின் அறிவித்தலுக்கு பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளில் நடைபெற்ற உள்ளுராட்சி மாநகரசபை தேர்தல் முடிவுகளும் இந்திய - சிறீலங்கா அரசுகளின் வடபகுதி மீதான அரசியல் ஆதிகத்திற்கு பலத்த பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

யாழ்பாணத்தில் 18 விகிதமான வாக்கு பதிவுகள் நடைபெற்றது, அந்த மக்கள் சிறீலங்கா அரசின் அரசியல் நடைமுறைகளில் எவ்வளவு தூரம் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்த போது அது விடுதலைப்புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரு போலியான மயைதோற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனை அனைத்துலகமும் நம்பியிருந்தன. ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காண்பிக்காததும், தேர்தலில் பங்குபற்றிய சிறிய தொகை மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழரசுக்கட்சியை ஆதரித்ததும் தமிழ் மக்களின் ஒரு அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.

மேலும் இந்த தேர்தலில் பல குளறுபடிகள் நிகழந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்து வருகின்றன. அங்கு ஒரு இயல்பான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தக்கூடிய அமைப்புக்களோ, அனைத்துலக ஊடகங்களோ இருக்கவில்லை. அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் தற்போது எட்டப்பட்ட 18 சத விகித வாக்குகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான தாகம் தற்போதும் உள்ளது என "த ரைம்ஸ்" வாரஏடு தெரிவித்திருந்தது. அதனை போலவே மிகப்பெரும் இராணுவ அழுத்தத்தின் மத்தியில் வாழ்ந்தாலும் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெறவேண்டும் என்ற கோட்பாட்டை தக்கவைத்துள்ளனர். களத்திற்கு அப்பால் இந்த கோட்பாடுகள் புலத்தில் தான் அதிகம் தீவிரம் பெற்று வருகின்றது.

அதனை முறியடிக்க சிறீலங்கா - இந்திய அரசுகள் தீவிரமாக முயன்று வந்தாலும் வெளிநாடுகளின் சட்டவிதிகள் அவர்களின் நடவடிக்கையை ஒரு எல்லைக்கு அப்பால் அனுமதிக்கப்போவதில்லை. மேலும் வலுவான அரசியல் கட்டமைப்புக்களுடன் அனைத்துலகத்துடன் இராஜதந்திர உறவுகளை வளர்த்துக்கொள்ளும் போது நாம் ஒரு பலமான சக்தியாக எம்மை சிறீலங்காவுக்கு வெளியில் கட்டியமைத்துக்கொள்ள முடியும். அதனூடாக ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அடுத்த கட்ட நகர்வு முனைப்பாக்கப்படும். அதனை அடைவது எவ்வாறு? அரசியல் வழிமுறையிலா அல்லது ஆயுதவழியிலா என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ளும்.