Thursday, January 29, 2009

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: (தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமரன் அளித்த இறுதி மடல்)

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

Tuesday, January 27, 2009

ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன.

தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது.
1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.
ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.
இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார்.
இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?
2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.
13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.
17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?
22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?
29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?
30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.
32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?
33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?
34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?
36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?
38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?
39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?
40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?
42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?
43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?
தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது.
கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து.
'விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.

Saturday, January 17, 2009

கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை?

இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக்குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின்ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில்கையெழுத்தி இடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில்கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கியபோது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்......எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டுவரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?

அம்மா, அப்பாவின்மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட்அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலைநாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம்மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும்திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களைஅனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு 20 இரங்கற்பாஅனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவதுகிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்குபயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும்வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள்.

கொஞ்சம்பாவமாவது குறையட்டும்.......மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின்பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள்எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலைவெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போதுநீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கானகுறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத்தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள்தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக்கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின்இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால்அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில்எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில்முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறைஅடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்றுபோவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும்.

ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத்தோன்றவில்லை......எனக்கு....அமைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும் கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா ௨லகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம்அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத் தமிழர்களே........ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின்விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.

இப்படிக்கு,வலி கலந்த நம்பிக்கைகளுடன்,உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து

Sunday, January 11, 2009

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக பிரகடனப்படுத்துவோம்.

"உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும்.. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது..." - மேதகு வே.பிரபாகரன் அவர்கள்....

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்
தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!
ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு. தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது.
அந்த வகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.
தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக் கோடு இலங்கை எங்கின்ற தேசத்தை நடுவனாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலக பந்தில் ஒரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது.
குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ்க்குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்களிப்பீடுகளை தொடக்கமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் எனக்கூறும் இவர்கள், தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள்.
ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகத் அன்றே பகுத்து வைத்தார்கள். 'வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, சாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.
ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள். அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று பண்டைக் காலத்தில் கணக்கிட்ட தமிழர்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும் எனவும் நிறுவி தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி - ஆனி தங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக்கொண்டான்.
பொங்கல் திருநாளைத் தமிழர்கள் 'புதுநாள்' என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.
தமிழ் ஆண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.
ஒரு இனத்தின் அடையாளம் இன்னோர் இனத்தின் அபார வளர்ச்சியினால் அழிக்கப்படும் என்ற தத்துவக்கோட்பாட்டுக்கு அமைவாகவோ என்னவோ பின்னாளில் வந்த இனங்களின் நாகரீக ஆளுகைக்கு அடிமையாகிய தமிழர் இனம் தனது வாய்வின் கணீப்பீட்டு நாளை புறம் தள்ளி மாற்றார் கணிப்பீடுகளை தனது அடையாளமாக மாற்றிக் கொண்டதன் விளைவாக தமிழர் புத்தாண்டு புறம் தள்ளப்பட்டது.
எனினும் காலச்சுழற்சியின் வேகத்துக்குள் தன்னினக் கருவைச் சுமக்கும் இனம் தனக்கான தாயகத்தை உருவாக்கியுள்ள சூழலில், தனது தொன்மை மிக்க அடையாளங்களையும் நிலைநாட்ட முற்படுதல் அவசியமாகின்றது.
தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கு என பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலக சட்டம் வரையறை செய்கின்றது.
இதை கவனத்தில் எடுத்த ஈழத்தமிழர்கள் "இந்த ஆண்டின் தைப்பொங்கல் நாளான ஜனவரி மாதம் 14 ஆம் நாளினை தமது புத்தாண்டுத் நாளாகவும் இருள் அகன்று இழந்த நிலப்பரப்புக்கள் மீட்கப்பட்டு எமது இனம் நிமிர்வு பெறுவதற்கான விடுதலை ஆண்டாய் மலரவேண்டும் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்ள உறுதிபூண்டுள்ளனர்.
இப்புனித நாளில், நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் உயரிய பணியையும் உயிர் மெய்யாக்கியுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே.
தமிழ்நாடு அரசும் "தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் நாள் என்பதற்கு, இந்த ஆண்டு சட்ட வடிவம் கொடுத்துள்ளது." எனவே தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.
தைப்புத்தாண்டில் தமிழீழ மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து, இளங்காலை பூத்தெழும் கீழ்வானத்தே, தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும். அமைதி நிறைந்து புதுவாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழீழ மண்ணின் பொங்கற் பால் பொங்கட்டும்.
தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருநாளில் உலகு எல்லாம் சிதறிய தமிழர் எல்லாம் தமிழீழ மண்ணை மீட்பதற்காய ஒன்றாய் இணைந்திடுவோம்.
தமிழர் நாம் விரிந்து கிடக்கும் பூமியில் பரந்து கிடந்தாலும் தாய் மொழியாம் தமிழைக் காத்து, வளர்த்தெடுத்து தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களோடு வாழ்ந்து தமிழனாய் தரணி எங்கும் தலைநிமிர்ந்து வாழ எங்கள் சுதந்திர பொங்கல் திருநாளை வரவேற்போம்.

நெருப்பாறுகள் கடந்து அக்கினிக்குஞ்சுகளாய் எமது தாயக விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் அளப்பரிய தியாகங்கள், வெற்றிகள், சாதனைகள், பெரும் சரித்திரங்களைப் படைத்தும் சமகாலத்தில் தோல்விகள் இழப்புக்கள், துன்பங்கள், துரோகங்கள் போன்றவற்றைக் கடந்தும் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழியில் வீராவேசத்துடன் தனது சுதந்திர தாயகம் நோக்கி அசையா உறுதியுடன் தமிழீழ பிறப்பிற்காய் போர்க்களத்தில் போராடி வருகின்றனர். இருப்பினும் இன்று எமது விடுதலைப் பயணம் ஒரு சூட்சுமம் நிறைந்த ஏமாற்றம் கொண்ட நிச்சயமற்ற காலமாய் பரிணமித்து நிற்பது போன்ற மாயைத்தோற்றத்தை உலகிற்கு வெளிக்காட்டி நிற்கின்றது.
தமிழீழ நிலப்பரப்பின் பரவலான வீழ்ச்சியும், சிங்கள இனவெறி அரசின் தமிழ் இன அழிப்பின் உச்ச போர் முனைப்பும் எம்மைச் சூழ்ந்திருக்கும் போர் மேகமும் கொலைவெறி அரசிற்கு கொடிய ஆயுதங்களை கொடுக்கும் உலக நாடுகளின் தமிழர் விரோதப் போக்கும் எமக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தந்து நிற்கின்றது.
நாம் நம்பிக்கை கொண்டிருந்த எமது அண்டை நாடான இந்திய அரசும் எமக்கு நியாயமான தீர்விற்கு வழி வகுக்கும் என நினைத்த மேற்குலகமும் கொன்று ஒழிக்கப்படும் தமிழ் இனத்தின் அவலத்தில் எள்ளளவேனும் அக்கறையில்லாது இருப்பது எமக்கு தாங்கொணா துன்பத்தையும் மனத்தில் ரண வலியையும் ஏற்படுத்துகின்றது.
இந்த தோற்றம் போலியானது நிரந்தரமானது அல்ல என்பதை எமது தலைவன் புரிய வைக்கும் காலமே இனிவரும் காலங்களாய் அமையும்.
முகில் கூட்டம் சூரியனை மறைப்பதால் சூரியன் அழிந்து போய்விட்டதாக அர்த்தமாகாது. இதைப் போல் நமது தாயகத்தை போர் மேகங்கள் மறைத்து நிற்கின்றன. இந்த போர் மேகங்களை கலைத்து நமது சூரியத்தேவன் வெற்றிவாகை சூடி சுதந்திர ஒளி வீசுவான். இது திண்ணம்.
இந்த நிலையை உணர்ந்து தமிழனின் சுதந்திர வாழ்விற்கு தமிழனே உறுதுணை என்ற யதார்த்தத்தை உணர்ந்து களத்திலும் புலத்திலும் தமிழர் தம் பரப்பு எல்லாம் ஒருங்கிணைத்து சுதந்திர பொங்கலுக்காய் எழுச்சி கொள்வோம்.
உறுதியின் உறைவிடமாய் இலட்சியத்தின் இருப்பிடமாய் சுதந்திர வேட்கையின் சூரியனாய் எத்துயர் வந்தபோதும் தமிழ் மானத்துடன் மண் காக்கும் பெரும் காவலனாய்த் துணையிருக்கும் வரலாறு தந்த வல்லமை எம்பெரும் தலைவன் பிரபாகரனே.
அந்தத் தலைவனின் எண்ணங்களை செயலாக்கும் தளபதிகளே, தலைவரினதும், தளபதிகளினதும் வழி நடத்தலை ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வெற்றி தரும் போராளிகளே, எமது சுதந்திர, தேசிய விடுதலை இயக்கத்தை வளர்த்து, கட்டிக்காத்து அதற்காக பெரும் சுமைகளையும் ஆறாத துன்பங்களையும் தாங்கி நிற்கும் எம் போற்றுதற்குரிய தமிழீழ மக்களே. ஒன்றுபட்ட சக்தியாய் ஒருமித்த பலம் கொண்டு போர்க்கருவியோடு, ஏற்கருவி தாங்கி பொங்கிடுவீர் சுதந்திர பொங்கல் தனை.
எம் இரத்த உறவான மக்களே!
நாங்கள் இருக்கின்றோம் பலம் கொடுப்பதற்கு, உரம் கொடுப்பதற்கு ஏன் எம் உயிரையும் கொடுப்பதற்கு நம்பிக்கையோடு வெற்றிக்களமாடுங்கள்.
உலகமே எதிர்த்து நின்றாலும் எம் உரிமையை மறுத்து நின்றாலும் எம் சுந்திர வாழ்வை தடுத்து நின்றாலும் ஏன் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து எம்மை அழித்தாலும் சிங்களமே திரண்டு வந்து எம்மை கொன்றொழித்தாலும் எம் விடுதலைத் தாகம் தணியாது. தமிழர் நாம் உறுதி குலையோம். நாம் எழுச்சி கொண்டு எம் தாயகத்தை நிச்சயம் வென்றெடுப்போம். எங்கள் சுதந்திரத்தை, எங்கள் தாயக விடுதலையை நிர்ணயிக்கும் ஒரே சக்தியாகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழீழ மக்களாகிய நாங்கள் ஒன்றிணைவோம்.
ஆயிரம் ஆயிரம் சுமைகளைத் தாங்கி தமது இன்னுயிர்களை கூட காணிக்கையாக்கி தலைவன் வழி நின்று தடைகளையும் இடர்களையும் தகர்த்தெறியும் எம் உயிரிலும் மேலான களப் போராளிகளே, தமிழீழ மக்களே.
இனிய தைத்திருநாளில் நாம் உமக்கு வாழ்த்துரைக்கும் இத்தருணம் புலம்பெயர் தமிழர் நாம் எமது தாயகத்தில் சுதந்திரக் காற்று நித்தியமாய் வீசும் வரை எமது வானில் எம் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும் வரை எமது உடல் உழைப்பு வளம் அனைத்தும் அர்ப்பணித்து எமது சுதந்திர தேசம் அங்கீகாரம் பெறும் வரை முழு மூச்சுடன் உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழர்களே! உலகு எல்லாம் பரந்து கிடக்கும் நாம் பலமாய் இருக்கின்றோம். எமது பலங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட சக்தியாய் உருவெடுக்கும் போது உலகமே எதிர்த்து நின்றாலும் எமது தனிப் பலத்தில் தமிழீழத்தை மீட்டெடுப்போம் என வீட்டுக்கு ஒருவராய் நாட்டுக்காய் எழுவோம்.
ஏழு கடலைத் தாண்டி எட்டுத்திசை எங்கும் கோலோச்சி வாழ்ந்த இனம் வேரறுந்து வாழும் நிலை மாற்றுவோம், வீரியத்தின் விழுதுகளை கோலோச்ச அரியணையில் ஏற்றி நிற்கும்
அமெரிக்க தமிழர்களும் ஐரோப்பியக் கண்டத்தில் அயராது உழைக்கின்ற உறவுகளும்
உலகத்தின் மூலையில் ஒதுங்கிக்கொண்டாலும் அலை கடலை ஆரத்தழுவும் அவுஸ்ரேலியத் தமிழர்களும்
ஆர்ப்பரித்து உறவுக்காய் ஆதரவுக்கரம் தரும் ஆபிரிக்கக்கண்டத் தமிழர்களும் ஆசிய நாட்டின் பெரும் தமிழர் பரம்பரையும் அவனியில் தமிழருக்கு அங்கீகாரம் தமிழீழம் ஒன்றே என்ற முடிவோடு எமது விடுதலையை நாமே வென்றெடுப்போம் என்ற உணர்வோடு விடுதலைத்தீ மூட்டுவோம்.
எமது தொப்புக் கொடியாம் தமிழக உறவுகளே!
நீங்கள் ஆற்றும் தமிழீழ அங்கீகாரத்திற்கான பணியும் தார்மீக ஆதரவும் உதவிகளும் எங்களுக்கு நம்பிக்கை உணர்வுகளைத் தந்து நிற்கின்றது.
இத்தருணத்தில் தமிழீழ மக்கள் சார்பில் உளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். உங்கள் பணி மேலும் வளர்ந்து உலகத் தமிழர் சக்தியாய் உருவெடுத்து தமிழர்களுக்கான தேசம் மீட்கத் தடைகளைத் தாண்டி கரம் கொடுக்க வேண்டும் என உரிமையுடன் கோரி நிற்கின்றோம்.
தாய் மொழியாம் தமிழை காப்பதற்கும் தமிழர்களின் தாயகத்தை மீட்பதற்கும் உலகத் தமிழர் ஒவ்வொருவரும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து உணர்வோடும் உறுதியோடும் பணி செய்து பாரினில் தமிழர் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ வழி சமைப்போம்.
"எங்கள் சமுதாயம் ஏழாயிரம் ஆண்டு திங்கள்போல் வாழ்ந்து செங்கதிர் போல் ஒளிவீசும் மங்காத போர்க்களத்தும் மாளாத வீரர் படை கங்குல் அகம் என்றும் காலைப் புறம் என்றும் பொங்கி விளையாடிப் புகழ் ஏட்டிற் குடியேறித் தங்கி நிலைத்துத் தழைத்திருக்கும் காட்சிதனைக் கண்காண வந்த கலை வடிவே நித்திலமே! பொங்கற்பால் பொங்கிப் பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!"

Saturday, January 10, 2009

இஸ்ரேலை கண்டிக்கும் நாடுகள் சிறிலங்காவை கண்டிக்காதது ஏன்?: "நிலவரம்" ஆசிரியர் தலையங்கம்

பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கும் அனைத்துலக நாடுகள், இஸ்ரேலைப் போலவே தமிழீழப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவை கண்டிக்காதது ஏன் என்று "நிலவரம்" ஏடு கேள்வி எழுப்பியுள்ளது.
சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாத இருமுறை ஏட்டின் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாலஸ்தீனத்தின் காசா பிரதேசத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையையும் அதில் அளவுக்கு அதிகமான பலப்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதையும் உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இதற்கெனத் தனி விவாதம் நடாத்தப்பட்டு வருகின்றது. பாலஸ்தீன மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்பவர்கள். அவர்களது நிலம் ஏற்கனவே இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 27 முதல் நடைபெற்று வரும் வான் குண்டுவீச்சுக்களும், அதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தரைவழி இராணுவ நடவடிக்கைகளும் இரண்டாவது ஆக்கிரமிப்பாக அமைந்துள்ளன. ‘தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்பதைப் போன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கட்டுப்பாடற்ற ஆதரவைக் கொண்டுள்ள இஸ்ரேல், தனது செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டே அனைத்துலக சமூகத்தின் கண்டனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனது அடாவடித்தனத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அனைத்துலக போர் விதிகளுக்கு முரணாக பாடசாலைகள், மத வழிபாட்டு இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ஐ.நா. சபையால் நிர்வகிக்கப்படும் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் பிள்ளைகள், பெண்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றை பற்றி கவலைப்படாத இஸ்ரேல் தனது தாக்குதல்களை மூர்க்கத்தனமாகத் தொடர்ந்து வருகின்றது. காசா பிரதேசத்தை பல மாதங்களாக பொருளாதார முற்றுகைக்குள் வைத்திருக்கும் இஸ்ரேல், எகிப்து நாட்டு எல்லையில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவதற்காகத் தோண்டப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளைக் கண்டு பிடித்து அழித்து வருகின்றது.
இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் காசா பகுதிக்குள் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டுமெனத் தீர்ப்பு வழங்கியிருந்தும் கூட அதனை மதித்து நடக்க இஸ்ரேல் முன்வரவில்லை. இஸ்ரேல் காசா பகுதியில் எத்தகைய அராஜகத்தைப் புரிந்து வருகின்றதோ அதற்குச் சற்றும் சளைக்காத வகையில் சிறிலங்கா அரசும் அதன் படைகளும் தமிழர் தாயகத்தில் அராஜகம் புரிந்து வருகின்றன. குடிமக்கள் மீதான வான் குண்டுத் தாக்குதல்கள், பாடசாலைகள், வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெயர்ந்த மக்கள் மீதான கொத்தணிக் குண்டுத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை, மீன்பிடித் தடை என வகை தொகையற்ற தடைகள் இதுதவிர சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், காணாமற் போதல்கள், கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு, ஊடக அடக்குமுறை என சகலவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை சிங்கள தேசம் நடாத்தி வருகின்றது. காசா மீதான இஸ்ரேலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் உலக நாடுகளோ, ஐ.நா. சபையோ சிங்கள தேசத்தைக் கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ முன்வரவில்லை. மாறாக ஒரு சில நாடுகள் சிங்களத்தின் இன ஒழிப்புப் போருக்கு நேரடி மற்றும் மறைமுக பொருண்மிய, படைத்துறை உதவிகளை நல்கி வருகின்றன. ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை? புரியவில்லை. காசாவில் உள்ள மக்களே மக்கள் தமிழர்கள் மக்களில்லை என்பதா? அல்லது கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்பதுவா?
இத்தனைக்கும் தமிழர் தாயகத்தில் அட்டூழியம் புரியும் சிங்களப் படைகள் இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் வானூர்தியில் பறந்துதான் தடைசெய்யப்பட்ட ரஸ்யத் தயாரிப்பான கொத்துக் குண்டுகளை வீசி வருகின்றன. சிங்களக் கடற்படையினர் இஸ்ரேலியத் தயாரிப்பான டோரா படகுகளில் வந்துதானே கடற்றொழிலாளர்களை கொன்று குவித்து வருகின்றனர். காசாவில் உள்ள மக்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அங்கே இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரி வரும் அனைத்துலக சமூகம் ஏன் தமிழர் தாயகத்தில் நடைபெறும் அராஜகத்தை மட்டும் கண்கொண்டு பாராமல் உள்ளது? ஒத்த தன்மையுள்ள இரண்டு சமூகங்கள் விடயத்தில் இரட்டை அணுகுமுறையினை அனைத்துலக சமூகம் கடைப்பிடிக்குமானால் அறிவுரை கூறும் தகுதியை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். இது பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன?

முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்போது எழுப்பப்படும் மிகப் பெரும் கேள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான போரில் படையினர் தொடர்ந்தும் பேரிழப்புகளை சந்தித்து வந்தபோது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வந்தபோது...
முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெடுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது. கிளிநொச்சிக்கான போர் உண்மையிலேயே படையினரின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே இருந்தது. பூநகரி நோக்கிய முன்நகர்வு போலவே கிளிநொச்சிக்கான போருமிருக்குமெனப் படைத்தரப்பு கருதியிருந்தது. ஆனால் நிலைமை தலைகீழாக இருந்ததை கிளிநொச்சிக்கான சமரின்போது படையினர் நன்குணர்த்திருந்தனர். "ஏ9' வீதியை முழுமையாகக் கைப்பற்றினால் மட்டுமே பூநகரியை கைப்பற்றியதற்கான பலன் கிடைக்குமென்பதை படையினர் பூநகரிக்கு வந்த பின்னரே உணர்ந்தனர். பூநகரியை படையினர் கைப்பற்றி மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையிலும் சங்குப்பிட்டி கேரதீவு ஊடான கடல் பாதையை படையினரால் இன்று வரை திறக்க முடியவில்லை. பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு முதல் கிளாலி வரையான பகுதிகள் புலிகள் வசம் இருக்கும் வரை பூநகரி ஊடாக சங்குப்பிட்டி-கேரதீவு கடல் பாதையை திறக்க முடியாதென்பதை படையினர் உணர்ந்தனர். இதனால்தான் பூநகரிக்கான சமரை விட பரந்தன் மற்றும் கிளிநொச்சிக்கான சமரில் புலிகள் மிகுந்த அக்கறை காட்டினர். ஆனால் பூநகரியை கைப்பற்றியும் அதனால் பிரயாணம் எதுவும ஏற்படாதபோதும் பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம படையினரால் பரந்தனுக்கு வர முடிந்தது. பூநகரி பரந்தன் வீதியூடாக முன்நகர்ந்த படையினர் பரந்தன் நதியை வந்தடைந்ததாலேயே படையினரால் இன்று கிளிநொச்சியைக் கைப்பற்ற முடிந்தது. இதனால்தான் கிளிநொச்சிக்கான போரில் படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தபோது பரந்தனைக் கைப்பற்றும் முயற்சியை படைத்தரப்பு தீவிரப்படுத்தியிருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக நேரடிச் சமரில் ஈடுபடுவது பேரிழப்புகளை ஏற்படுத்தி வந்ததால் கிளிநொச்சி முற்றுகையை சற்று தளர்த்திய படைத்தரப்பு பூநகரி பரந்தன் வீதியூடான முன்நகர்வு முயற்சியை தீவிரப்படுத்தியிருந்தது. கிளிநொச்சிக்கான முற்றுகைப் போரில் படையினர் கிளிநொச்சியின் தென்பகுதியிலிருந்தும் கிளிநொச்சியின் மேற்குப் புறத்திலிருந்தும் கடும் தாக்குதலைத் தொடுத்து வந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றுவது படையினருக்கு பெரும் கௌரவப் பிரச்சினையாகவும் அதேநேரம் கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டால் அது புலிகளுக்கெதிரான பிரசாரப் போரை முன்னெடுக்க மிகவும் உதவுமெனவும் அரசு கருதியது. ஆனால் கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை புலிகள் மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தனர். சில நகரங்கள் விடுதலைப் போராட்டத்தினைத் தீர்மானிப்பதில்லையென்றாலும் கிளிநொச்சியை இழப்பதென்பது புலிகளுக்கும் கௌரவப் பிரச்சினையாக இருந்ததுடன், வன்னிப்போர் இரு பிரதான நகரங்களை மையமாக வைத்த மேற்கொள்ளப்பட்டு வந்ததால் கிளிநொச்சி நகரின் வீழ்ச்சியுடன் போர் முனையும் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து விடுமென்பதால் கிளிநொச்சியை இழப்பதென்பது முல்லைத்தீவுக்கான போர் முனையை திறப்பதாயிருக்குமென்பதையும் புலிகளும் நன்குணர்ந்திருந்தனர். இதனால் தான் கிளிநொச்சியின் வீழ்ச்சியுடன், இதுவரை "ஏ9' வீதியின் மேற்குப் புறம் நடைபெற்ற யுத்தம் இனி "ஏ9' வீதியின் கிழக்குப் புறத்திற்கு மாற்றம் பெற்றுள்ளது. கிளிநொச்சிக்கான போரில் எதிர்பாராதளவிற்கு படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தனர். பல நூற்றுக்கணக்கான படையினர் குறிப்பிட்ட சில நாட்களில் கொல்லப்பட்டனர். மிகப்பெருந்தொகையான படையினர் படுகாயமடைய ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட நாட்களில் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இது படையினருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. கிளிநொச்சி மற்றும் பரந்தனை நோக்கி மேலும் மேலும் முன்னேற முற்பட்டபோது இழப்புகள் கூடினவே தவிர முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து புலிகளின் கவனத்தை பெருமளவில் திசை திருப்ப வேண்டிய அவசர தேவை படையினருக்கு ஏற்பட்டது. வன்னிப் போரில் ஆரம்பம் முதலே மணலாறு களமுனை மிகவும் மந்தமாகவேயிருந்தது. "ஏ9' வீதியின் மேற்குப் புறத்திலேயே படையினரின் முழுக் கவனமும் இருந்ததால் முல்லைத்தீவு முனையில் புலிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படவில்லை. ஆனால் கிளிநொச்சிப் போரில் படையினருக்கு பெரும் நெருக்கடி ஏற்படவே முல்லைத்தீவு நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தி புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க படைத் தரப்பு தீர்மானித்தது. இந்த நிலையில், கிளிநொச்சியைவிட புலிகளுக்கு முல்லைத்தீவு முனையில் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த வண்டிய அவசர மற்றும் அவசிய தேவையுமிருந்தது. அளம்பில் பகுதியினூடாக படையினர் முள்ளியவளையை அடைந்ததுடன் மாங்குளம் முல்லைத்தீவு வீதியை முழுமையாகக் கைப்பற்றும் தீவிர முயற்சியிலும் படையினர் இறங்கினர். அதேநேரம் முள்ளியவளை மற்றும் தண்ணீரூற்றிலிருந்து முல்லைத்தீவு நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டபோது புலிகள் கடும் பதிலடி கொடுக்கவே படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து முல்லைத்தீவு நோக்கிய நகர்வைவிட முள்ளியவளையிலிருந்து நேரே வடக்காக முன்நகர்ந்து அடர்ந்த காடுகளினூடாக புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வுக்கு படையினர் முற்பட்டனர். புதுக்குடியிருப்புக்குச் சென்ற பின்னர் கிழக்கே திரும்பி கரையோரத்தை நோக்கி நகர்ந்தால் முல்லைத்தீவை மோதல் எதுவுமின்றி கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. அதேநேரம் புதுக்குடியிருப்பு நோக்கிய நகர்வைத் தீவிரப்படுத்தும்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து தங்கள் கவனத்தை முல்லைத்தீவு நோக்கி திசைதிருப்புவரெனவும் படைத்தரப்பு கருதியது. இந்த நிலையிலேயே கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளிலிருந்து விலக புலிகள் தீர்மானித்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இதனால்தான், படையினர் பேரிழப்புகளை சந்தித்து வந்த கிளிநொச்சி மற்றும் பரந்தன் களமுனைகளை கைவிட்டு புலிகள் "ஏ9' வீதிக்கு கிழக்கே தங்கள் முழுக் கவனத்தையும் திரை திரும்பியிருக்கலாமெனக் கருதப்படுகிறது. புலிகளின் இந்தப் பின்நகர்வு படையினருக்குப் பெரும் வாய்ப்பாகிவிட்டது. கிளிநொச்சிக்கான போரில் தொடர்ந்தும் படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்து வந்தபோது வன்னிச் சமர் குறித்து தெற்கில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. கிளிநொச்சி சமர், இதுவரை வன்னியில் நடைபெற்ற சமர்களை விட படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகள் அண்மையில் ஆயுதக் கப்பல்களில் பெருமளவு போர்த் தளபாடங்களை தரையிறக்கியிருந்தனர். படையினரும் அதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். கிளிநொச்சி மற்றும் பரந்தன் சமர்க்களத்திலும் புலிகள் ஆட்லறி ஷெல்களையும் மோட்டார் குண்டுகளையும் மழைபோல் பொழிந்து படையினருக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தியபோது, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் முல்லைத்தீவு கடற்பரப்புக்கு வந்ததை படையினர் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது. கிளிநொச்சி பரந்தன் களமுனை இப்படியிருக்கையில் புலிகள் ஏன் அங்கிருந்து விலகத் தீர்மானித்தார்கள் என்ற கேள்வி ஆய்வாளர்களைக் குடைகிறது. இவ்விரு முனைகளிலிருந்தும் புலிகள் விலகத் தீர்மானித்தபோது, படையினர் பரந்தனை அல்லது கிளிநொச்சியை பிடித்துவிடும் நிலையிலிருக்கவில்லை. கிளிநொச்சிக்கு தெற்கே சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்தில் "ஏ9' வீதியில் இரணைமடுவுக்கு அப்பாலும் கிளிநொச்சிக்கு மேற்கே சுமார் ஆறு கிலோமீற்றர் தூரத்தில் அடம்பன் பகுதியிலும் பரந்தனுக்கு மேற்கே, பூநகரி-பரந்தன் வீதியில் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரத்திலும் படையினர் நிலைகொண்டிருந்தனர். பூநகரி பரந்தன் வீதிக்கு வடக்கே குடாக் கடலோரத்திலிருந்து இரணைமடுவரை பாரிய மண் அணை எழுப்பி படையினரின் முன்நகர்வு முயற்சிகளுக்கு மிகக் கடும் பதிலடி கொடுத்தவாறு படையினரை அந்தந்த இடங்களிலிருந்து சிறிது தூரம் கூட முன்நகர அனுமதிக்காது தடுத்து வந்த நிலையிலேயே, கடந்த செவ்வாய்க்கிழமை (30 ஆம் திகதி) பரந்தன், கிளிநொச்சி களமுனைகளிலிருந்து விலகுவதென புலிகள் திடீர் முடிவெடுத்திருந்தனர். 30 ஆம் திகதி அதிகாலை இந்த முனைகளில் படையினர் வழமை போல் கடும் தாக்குதலைத் தொடுத்தபோது புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவில்லை. அவர்களது பதில் தாக்குதல்களில் உக்கிரமில்லை. பலவீனமாகவேயிருந்தது. இதையடுத்து படையினர் கடும் தாக்குதலை நடத்தியவாறு அனைத்து முனைகளிலும் முன்னேறத் தொடங்கினர். புலிகளின் பதில் தாக்குதலில் வலு இல்லாததால் பூநகரி பரந்தன் வீதியூடாக பரந்தன் சந்தியை சென்றடையத் தீர்மானித்தனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வில் மிகக் கவனமாயிருந்தனர். புலிகளின் இந்தப் பின்நகர்வு படையினருக்கு ஆச்சரியமாயிருந்தது. அதேநேரம் மிகவும் முன்னெச்ரிக்கையுடன் நகர்ந்தனர். புலிகள் எங்காவது தங்களைப் பொறிகளுக்குள் சிக்க வைத்து விடுவார்களா என்ற பெரும் சந்தேகமிருந்ததால் முதலில் பரந்தன் சந்தியை கைப்பற்றத் தீர்மானித்தனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வின்போது புலிகள் தந்திரமான நடவடிக்கை மூலம் தங்களைச் சிக்கவைத்து விடலாமென்பதால், "ஏ9' வீதியில் பரந்தன் சந்தியை சென்றடைந்துவிட்டால் பின்னர் புலிகளின் தந்திரங்களை முறியடித்தவாறு பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி முன்நகரலாமென படையினர் திட்டமிட்டனர். கிளிநொச்சியைவிட பரந்தன் மிக முக்கியமாயிருந்தது, பரந்தன் சந்தியை கைப்பற்றுவதன் மூலம் நான்கு முக்கிய பகுதிகளுக்கான விநியோக மார்க்கங்களையும் கைப்பற்ற முடியும் அல்லது தடுக்க முடியுமென்பதையும் அறிந்திருந்தனர். பரந்தன் சந்திக்கு தெற்கே "ஏ9' வீதியில் கிளிநொச்சியும், பரந்தன் சந்திக்கு கிழக்கே "ஏ35' வீதியில் (பரந்தன் முல்லைத்தீவு வீதி) முரசுமோட்டையும் பரந்தன் சந்திக்கு வடக்கே "ஏ9' வீதியில் ஆனையிறவும், பரந்தன் சந்திக்கு மேற்கே "பி 69' வீதியில் (பூநகரி பரந்தன் வீதி) பூநகரியும் உள்ளன. பரந்தன் சந்தியை கைப்பற்ற முன்னர் இந்தச் சந்தியூடாகவே நான்கு திசையிலுமான விநியோகங்களையும் போக்குவரத்தையும் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இந்தச் சந்தியை படையினர் கைப்பற்றியதன் மூலம் இதனூடாக புலிகள் ஆனையிறவு முதல் முகமாலை வரை மேற்கொண்டு வந்த விநியோகங்கள் தடைப்பட்டு விட்டன. முகமாலை, மற்றும் கிளாலிக்கான விநியோகங்களை புலிகள் இனி முல்லைத்தீவு கரையோரத்தால், வடமராட்சி கிழக்கின் செம்பியன்பற்று ஊடாகவே மேற்கொள்ளமுடியும். அதுவும், படையினர் பரந்தன் சந்தியிலிருந்து ஆனையிறவு நோக்கியும் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளிலிருந்து பளையை நோக்கியும் முன்நகர்ந்தாலும் பாரிய நெருக்கடிகளுக்குக்குள்ளாகிவிடுமென்ற படையினர் கருதுகின்றனர். பரந்தனையும் கிளிநொச்சியையும் கைப்பற்றிய படையினர் அடுத்து எந்த முனையில் நகர முற்படுவரென்ற கேள்வி எழுகிறது. பரந்தன்-முல்லைத்தீவு வீதியூடாக (ஏ35) முரசுமோட்டை நோக்கி முன்னேற முயல்வார்களா அல்லது "ஏ9' வீதியூடாக ஆனையிறவு நோக்கி முன்னேற முயல்வார்களா என்ற கேள்வி எழுகிறது. முல்லைத்தீவு புலிகளின் இறுதிக் கோட்டை என்பதால் முல்லைத்தீவில் புலிகளைச் சந்திக்க முன்னர் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றிவிடவே படையினர் முயல்வர். இதனால் படையினர் முல்லைத்தீவு நோக்கி நகர்வது போல் காண்பித்தவாறு, பரந்தன் முதல் முகமாலை வரையான மிகுதி "ஏ9' வீதியையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவர். படையினருக்கு பெருமளவு ஆட்பற்றாக்குறை நிலவுவதால் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள பெருமளவு படையினரை வன்னிக்குள் களமிறக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. அதனால் பரந்தனுக்கும் குடாநாட்டுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் வடமராட்சி கிழக்கையும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதன் மூலம் நாகர்கோவில் முதல் தென்கிழக்கே சுண்டிக்குளம் வரையான மிக நீண்ட (பலமைல்) கடற்பரப்பையும் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து கடற்புலிகளை முல்லைத்தீவில் மிகக் குறைந்தளவு கடற்பரப்புக்குள் உடனடியாக முடக்கி விடவும் படையினர் முனைவர். இதனால் படையினரின் அடுத்த நகர்வு பரந்தனிலிருந்து ஆனையிறவு நோக்கியும் கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து பளையை நோக்கியதாகவுமேயிருக்கும். இவ்வாறானதொரு நகர்வு வெற்றி பெற்றால் புலிகளை பரந்தன்-முல்லைத்தீவு வீதி முதல் (ஏ35வீதி) மாங்குளம்-முல்லைத்தீவு வீதி வரையான (ஏ34வீதி) சுமார் 40 கிலோமீற்றர் நீளமும் 40 கிலோமீற்றர் அகலமும் கொண்ட பிரதேசத்தினுள் முடக்கிவிட்டு பின்னர் முல்லைத்தீவு நோக்கி தெற்குப்புறத்திலிருந்தும் மேற்குப் புறத்திலிருந்தும் முன்னேறி கைப்பற்றிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. அதேநேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மிகவும் குறுகிவிட்டால் புலிகளை அந்தப் பகுதிக்குள் சுலபமாக முடக்கிவிட முடியுமெனவும் படையினர் கருதுகின்றனர். தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளிருக்கும் மூன்று இலட்த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் முதலில் அங்கிருந்து வெளியேற்றுவதிலும் அரசும் படைத்தரப்பும் தீவிர கவனம் செலுத்தும். இதனால், படையினர் அடுத்து "ஏ9' வீதியூடாக நகர்ந்து பரந்தனுக்கும் முகமாலைக்கும் இடையிலான பகுதிகளைக் கைப்பற்றுவதில் தீவிர கவனம் செலுத்துவர். இதேவேளை, பரந்தன் சந்தியை கைவிட்டதன் மூலம் இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என்பதை புலிகளும் நன்கறிவர். பரந்தனும் கிளிநொச்சியும் படையினர் வசமாகிவிட்டால் யுத்தமுனை உடனடியாக முல்லைத்தீவை நோக்கி திரும்பிவிடுமென்பதையும் புலிகள் நன்கறிவர். பரந்தன் சந்தி தங்கள் வசமானதும், பரந்தன் முதல் முகமாலை வரையான பகுதிகளைக் கைப்பற்ற முயல்வதென்பதுடன் அதன் மூலம் வடமராட்சி கிழக்கும் முழுமையாக படையினர் வசமாகிவிடுமென்பதையும் புலிகள் நன்கறிவர். அண்மையில் கூட கப்பல்களில் பெருமளவு ஆயுதங்களையும் போர்த்தளபாடங்களையும் அவர்கள் தருவித்துள்ளனர். கிளிநொச்சி மற்றும் பரந்தனிலிருந்து பின் நகர்ந்தபோது கூட அவர்கள் தங்கள் வளங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாது பின்னகர்த்தியுள்ளனர். புலிகளின் பிரதேசங்கள் நன்கு குறுகிவிட்டபோதும் மூன்று இலட்த்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களும் அவர்களுடனேயே இருக்கின்றனர். புலிகள் வழங்கிய ஏதோ நம்பிக்கையில் தான் அந்த மக்கள் அவர்களுடன் இருக்கின்றனர். தற்போதைய நிலையில் வலுக்கட்டாயமாக அந்த மக்களைப் புலிகள் தடுத்து வைத்திருக்கக்கூடிய சாத்தியமில்லை. தங்கள் பகுதிகளை நோக்கி யுத்தம் திசை திரும்பியுள்ளதையும் அந்த மக்கள் நன்கறிந்தும் இதுவரை அவர்கள் புலிகளுடன் முரண்பட்டு, புலிகள் படைகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூட எவரும் கூறவில்லை. மோதி அங்கிருந்து வெளியேற முயற்சிப்பதாகக்கூட எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. இவ்வாறானதொரு நிலையில் புலிகள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி உலகெங்கும் எழுப்பப்படுகின்றது. புலிகளை கடைசிப் பொறிக்குள் தள்ளி அவர்களை சரணடையச் செய்ய அல்லது அவர்களை அழித்துவிட வேண்டுமென இலங்கை அரசும் இனவாதிகளும் முயல்கின்றனர். வன்னிப்போரில் இலங்கை அரசுக்கும் படையினருக்கும் அனைத்து வகையிலும் உதவும் இந்தியா தமிழக மக்களின் உணர்வுகளைக்கூட மதிக்கத் தவறியுள்ளதுடன் இலங்கையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த எந்தவிதத்திலும் முன்வரவில்லை. இலங்கைப் படையினருக்கும் இலங்கையரசுக்கும் முழுஅளவில் இராணுவ உதவிகளை வழங்கும் இந்தியா, போர் நிறுத்தத்தை வலியுறுத்த முற்றாக மறுத்ததன் மூலம் தான் எந்தப் பக்கத்தில் நிற்கிறதென்பதை முழு உலகிற்கும் காண்பித்துவிட்டது. இதனால் வன்னியிலும் அதற்கு வெளியிலும் ஏற்படப்போகும் அழிவுகளுக்கான பொறுப்பை இந்தியாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் வன்னிப்போரில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமானால் அப்போது எதனையும் கோரக்கூடிய உரிமையையும் அது இழந்துவிட்டது. முற்றுமுழுதாக இந்திய அரசு ஈழத் தமிழர்களையும் கைவிட்டதன் மூலம் தனது வரலாற்றில் அதுமிகப்பெரும் கறையை ஏற்படுத்தப் போகிறது. இந்த நிலையில் வன்னியில் அடுத்த கட்ட படைநகர்வுகளை ஆரம்பிக்க படையினர் முயலக்கூடும். ஆனாலும் அவர்களுக்குப் புலிகளின் படைபலம் பற்றியும் தெரியும். பரந்தனையும் கிளிநொச்சியையும் புலிகள் ஏன் கைவிட்டார்கள் என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுகிறது. வன்னிக்குள் சகல பகுதிகளிலும் பரந்துவிரிந்து விட்ட நிலையில் முல்லைத்தீவுக்கான கடைசிப்போரையும் எப்போது ஆரம்பிப்பதென்பது குறித்து படைத்தரப்பும் யோசிக்கின்றது. புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பதை படையினரால் ஊகிக்க முடியாதுள்ளது. முல்லைத்தீவு நோக்கிய பாரிய படைநகர்வுக்கு எதிராக புலிகள் மிகத் தீவிரமாக எதிர்சமர் புரிவரென்பதால் பெருமளவு படையினர் கொல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் ஊகிக்கின்றனர். அதேநேரம் கிளிநொச்சி மற்றும் பரந்தனுக்கான போரில் பாரிய மண் அணைகளை அமைத்தது போன்று முல்லைத்தீவு களமுனைவில் புலிகள் பாதுகாப்பு அரண்கள் எதனையும் அமைக்கவில்லை. மிகக் குறுகிய பிரதேசத்திற்குள் அவர்களை முடக்கிவிட்டதால் மிகச் சுலபமாக அவர்களை முறியடித்து வெற்றி கொண்டுவிட முடியும் எனவும் படைத்தரப்பு எண்ணுகிறது. தற்போதைய நிலையில் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் மிக முக்கியமாக இருக்கப்போகின்றது. இறுதிப் போரை தொடுக்கப் படையினர் முயலும் போது புலிகள் எங்கிருந்து தமது பதில் நடைவடிக்கையை எப்படி ஆரம்பிப்பர் என்பதை எவராலும் ஊகிக்க முடியாதிருக்கிறது. அவர்களும் அங்குள்ள மக்களும் நம்பிக்கையுடன் இருப்பது தெரிகிறது. பரந்தன் மற்றும் கிளிநொச்சியை அவர்கள் திடீரென கைவிட்டபோது வேறு சில நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருப்பது போல் இலங்கை அரசிடமும் படையினர் மத்தியிலுமுள்ளது. இதனால் வன்னியில் இறுதிப் போரில் எவரை எவர் வெல்லுவார் என்பதை அறிய முழு உலகமும் காத்திருக்கின்றது.

விதுரன்

கலைஞர் கருணாநிதிக்கு ஈழத் தமிழ்மகனின் உள்ளக்குமுறல் (கடிதம்)

பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு, பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்ப்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம். ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நிற்க, பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக் கொண்டிருக்கின்றன. தாகம் தீர்க்க மழையில்லை. இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது. எல்லாரும் ஏமாற்றுகிறார்கள். ஏன் நீங்கள் கூடத்தான். எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும் போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம் நிறைந்து களிக்கிறேன். காலம் தள்ளிப் போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப் போகின்றன. ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்... உங்களுக்குத் தெரியாது ஐயா. அனுபவித்தால் தான் தெரியும்.
கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார் நிலத்தை நாம் பறித்தோம்? யார் உரிமைக்கு இடம் கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள். வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது. போகட்டும்
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள் ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள் ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்? போராட்டத்துக்கு அழைத்தீர்கள் சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம். ஏன் இடைநிறுத்தினீர்கள்?
எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக் காட்டினீர்கள். என்ன பயனாயிற்று?
எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை. அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன். நான் மட்டுமல்ல இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்
காடு எம்மை அடைகாத்துக் கொண்டிருக்கிறது அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக் கொண்டிருப்போம். அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்து விடாதீர்கள்.
எம்மை ஏமாற்றத் துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்த பின்னும் எம் ஆன்மா சாபமிடும். இது நிச்சயமான உண்மை.
கலைஞரே, நீங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொள்கிறார்கள். எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை. எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக் கொண்டே புள்ளி வைத்து முடித்து விடுகிறோம். கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது
இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம் ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு! எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்
இப்படிக்கு, ஓர் ஈழத்தமிழன்

Saturday, January 3, 2009

கிளிநொச்சி இலங்கை வசம்! கருணாநிதி காங்கிரசார் வசம்!


கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை.
சிங்கள இடது சாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புகளையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள் தரப்பில் இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்க வாய்ப்பில்லை. புலிகளுக்கு ராணுவத் தீர்வையும் மக்களுக்கு அரசியல் தீர்வையும் தருவதாகச் சொல்லி வன்னி மீது படையெடுத்த கடந்த 11 மாதங்களில் கிழக்கை மீட்டது போல எளிதாக வடக்கையும் மீட்டு விடலாம் என்றே சிங்கள அரசு படை திரட்டி போரில் குதித்தது. 2008 டிசம்பர் நத்தார் பண்டிகைக்கு முன்பு கிளிநொச்சியை மீட்டு இலங்கை மக்களுக்கும் ராணுவ துருப்புகளுக்கும் நல்ல செய்தி சொல்லலாம் என நினைத்தார் ராஜபக்ஷே. ஆனால் அவரும் அவரது சகாக்களும் கனவு கண்டதைப் போலல்ல புலிகளின் இதயப்பகுதியும் புலிகள் கொடுத்த பரிசும்.
வன்னி அடங்க மறுத்தது. ராணுவம் குறித்த காலக்கெடு கடந்து படையினர் பேரிழப்புகளை சந்தித்தார்கள். வன்னி மீதான படையெடுப்புக்கு இலங்கை பலி கொடுத்தது பல்லாயிரம் ராணுவச்சிப்பாய்களின் உயிர்களை. புலிகளின் இழப்புகளோடு ஒப்பிடும்போது ராணுவத்துக்கு நேர்ந்தது பேரிழப்பு. எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் பின் வாங்கினார்கள். புலிகள் விட்டுப் போன பகுதிகளை மீட்டு விட்டு அதை வெற்றிக் களியாட்டமாக மாற்றுகிறது ராணுவம். மேலோட்டமாக பார்க்கும் ராணுவ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது தோன்றினாலும் இரு தரப்பினருக்குமே வெற்றியற்ற வெற்றி அல்லது தோல்வியற்ற தோல்வி என்றே தோன்றுகிறது.
சரி போராளிகள் தரப்பிற்கு என்ன இழப்பு எனப் பார்த்தால், ஆனையிறவை வென்று ராணுவ ரீதியில் புலிகள் பலம் பெற்று அதனூடாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலம் என்பது ஈழத்தில் அமைதி நிலவிய மிக நீண்ட காலமாக இருந்தது. அந்தக் காலத்தில் புலிகளும் சரி ராணுவமும் சரி தங்களின் ராணுவ பலத்தை சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொண்டனர். புலிகள் தங்களை மரபு வழிப்பட்ட போர் முறைக்கு தயார்படுத்தினர். விமானப் படையை வடிவமைத்த புலிகள் தென்கிழக்கின் கவனத்தை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தார்கள். அதே சமயம் ரணிலுக்குப் பிறகு வெளிப்படையான இனவாதியாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தா ஆட்சிக்கு வந்த பிறகு புலிகளுக்கு ஏற்படுத்திய முதல் நெருக்கடி சர்வதேச அளவில் புலிகளை ஏராளமான நாடுகளில் தடை செய்ய வைத்ததுதான்.
உண்மையில் நார்வே முன்னெடுத்த பேச்சுக்களில் தந்திரமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டது இலங்கை அரசுதான். பேச்சுவார்த்தை மேஜைகளில் ஒப்புக் கொண்ட விஷயங்களைக் கூட நடைமுறைப்படுத்தாமல் ராணுவ ரீதியாக பலம் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. (அதற்குள் புலிகளைப் பிளவுபடுத்தி கருணாவை புதிய மீட்பராக உருவாக்கினார்கள்) பேச்சுவார்த்தைக் காலத்திலேயே வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுக்கும் ராணுவத்துக்குமான மோதல் வெடித்தாலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தை கொன்றது ராணுவ ஆய்வாளரும் பத்திரிகையாளருமான தராக்கியை கொன்றது என ராணுவம் வெளிப்படையான போருக்கு தயாரானது. புலிகளும் பழிக்குப் பழியாக லக்ஷ்மன் கதிர்காமரை கொன்றார்கள்.
இந்நிலையில் ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு ஒப்பந்தத்தில் இருந்து விலகி கிழக்கை மீட்போம் என்று அறிவித்தது. புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்து பின்னர் இலங்கை அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கருணா குழுவின் துணையோடு கிழக்கு மீட்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசு ஆதரவு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கில் வசந்தம் வந்ததாக ராணுவமும் ராஜபக்சேவும் சொல்லிக் கொண்டாலும் அன்றாடம் ஆள்கடத்தல், கொலைகள், இஸ்லாமிய, தமிழர் மோதல் என கிழக்கு வன்முறைக் காடாகவே இருக்கிறது. இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திறந்தவெளிச் சிறையான யாழ்பாணத்தைப் போல இப்போது கிழக்கும் மாறியிருக்கிறது, நாளை வடக்கும் மாறலாம். கிழக்கின் ஆட்சி கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கிழக்கில் கொடுத்த வசந்தத்தை வடக்கில் கொடுப்பதாக கடந்த செப்டம்பரில் வன்னிப் பிரதேசம் மீது படையெடுத்தது இலங்கை ராணுவம்.
முதலில் 74 மணிநேரத்திற்குள் வன்னியை மீட்பதாகச் சொன்ன ராணுவம் பல மாதம் போராடி கிளிநொச்சியை மீட்டிருக்கிறது. நடந்த போர் முறையைப் பார்க்கும் போது புலிகள் அதிக இழப்புகளுக்கு முகம் கொடுக்காமல் தந்திரமாக பின் வாங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவின் எதிர்காலம் கூட ராணுவத்தால் கேள்விக்குள்ளாகும்போது மரபார்ந்த ராணுவ அமைப்பான புலிகள் தங்களின் சிறகுகளைச் சுருக்கி ஒரு கெரில்லாப் படையாக மாறி அடர்ந்த அலம்பில் காடுகளில் இருந்து ஈழ மீட்புப் போரை முன்னெடுப்பார்கள் எனத் தெரிகிறது. ஆனால் மீட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது? வன்னியில் இழந்த ஏழாயிரத்திற்கும் அதிமான படையினரோடு ஓடிப் போன பல பத்தாயிரம் வீரர்களை கட்டாயப்படுத்திக் கொண்டு வந்து கிளிநொச்சியை எத்தனை காலத்திற்கு காப்பாற்றப் போகிறது என்பதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இது எதிர்பார்த்ததுதான். ஒரு மாதத்திற்கு முன்பே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் அறிவிக்கும்போது கிளிநொச்சியை அரசு கைப்பற்றினாலும் போராட்டம் தொடரும் என்றார். ஆனால் இலங்கை அரசின் அதிகபட்ச ஆசையால் அவர்கள் பிரபாகரனை சரணடையக் கோருகிறார்கள். போரின் வெற்றியை தேர்தலில் அறுவடை செய்வது, புலிகள் மீதான பிம்பங்களை உடைப்பது என்பதன் பிரச்சாரமாக மகிந்தா இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சில ஆயிரம் சதுர கிலோமீட்டரைப் பிடிக்க இலங்கை ராணுவத்திற்குப் பின்னால் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என ஏழு நாட்டு ராணுவத் தளபதிகள் இருந்தார்கள். தென்கிழக்கின் வலிமையான பல அடியாட்கள் இலங்கை ராணுவத்துக்கு துணை நின்றார்கள். அப்படியும் பேரிழப்புகளோடுதான் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டிருக்கிறது; இல்லை புலிகள் கிளிநொச்சியை முன்நோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் இதில் தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தமிழகத்துக்குத்தான். ஏனென்றல் ஆறரை கோடி தமிழ் மக்களும் ஈழத்தின் மீதான இலங்கை அரசின் போரை நிறுத்தக் கோரினார்கள். தமிழக முதல்வர் கருணாநிதியும் பல விதமான கவிதைகள், உணர்ச்சிக் கதையாடல்கள் மூலம் மத்திய அரசிடம் கெஞ்சிப்பார்த்தார். ஆனால் கருணாநிதியின் எல்லாக் கோரிக்கைகளையும் தூக்கி குப்பையில் வீசி எறிந்து விட்டு இலங்கைக்கு ராணுவ ரீதியாக தான் செய்யும் உதவிகளுக்கு கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிச் சென்று விட்டது இந்திய மத்திய அரசு.
ஒரு கட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது என்று கூட குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அதே சமயம் என் வாழ்நாளில் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லையே என்ற புலம்பல் வார்த்தைகளை வேறு உதிர்த்தார். கடைசியில் டில்லிக்குப் போய் பிரணாப் முகர்ஜியையாவது இலங்கைக்கு அனுப்புங்கள் என்ற கோரிக்கையை வைத்து விட்டு அமைதி காத்தார். வழக்கம்போல மத்திய அரசு அதையும் குப்பையில் வீச திமுகவின் பொதுக்குழுவைக் கூட்டி பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தோடு திமுகவும் அதன் தலைவரும் முடங்கிப் போனார்கள். ஒரு பக்கம் பதவி ஆசை. இன்னொரு பக்கம் காங்கிரஸை சமாளிப்பதற்கான புலி எதிர்ப்பு நடவடிக்கைகள் என இரண்டு பக்கமும் நாடகமாடி எந்த மேடையிலும் சோபிக்காமல் வசனமும் எடுபடாமல் இன்று புலம்பித்திரிவதைத் தவிர இந்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருக்கு வேறு வழியில்லை.
இவரைப் போன்ற ஒரு பெரும் நாடகக்காரர்தான் டாக்டர் ராமதாசும். மத்திய அரசில் பங்கெடுத்துக் கொண்டு ஈழ விவகாரத்தில் மத்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்காமல் பழியை எல்லாம் திமுக மீது சுமத்தி விட்டு தந்திரமாக நடந்து கொள்கிற ராமதாசும் கருணாநிதியும் ஒரே மேடையில் இணைந்து நடித்தால் நாடகம் சுவராஸ்யம் கூடக் கூடும். இன்று கிளிநொச்சி ராணுவத்தினர் வசமாக இவர்களின் பதவி ஆசையும் கொள்கை வீழ்ச்சியுமே காரணம். இவர்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்; அல்லது மத்திய அரசை கவிழ்த்திருந்தால் இலங்கை ராணுவ ரீதியாக பலமிழந்தாவது போயிருக்கும்.
2002-ல் புலிகளின் முற்றுகைக்குள் ஆனையிறவில் பல்லாயிரம் சிங்களத் துருப்புகள் சிக்கிக் கொண்டபோது இந்தியா தலையிட்டுதான் இலங்கை ராணுவத்தினரைக் காப்பாற்றியது. அது போல இன்று பாசிச இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது நடத்துகிற போரை நிறுத்தச் சொல்லுகிற இந்தியா ஒப்புக்குக் கூட இலங்கையில் போரை நிறுத்த சொல்லவில்லை. மாறாக அது மீண்டும் மீண்டும் சொன்னது, 'அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது' என்று. அதே சமயம் தனது ராணுவத் தளபதிகளை இலங்கை கள முனைக்கு அனுப்பி, கிளிநொச்சிப் போரை வழி நடத்தியது. மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என்று சொன்ன கருணாநிதியும் நிவாரணப் பொருட்களில் அக்கறை காட்டும் மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ராமதாசும் இந்திய அரசின் இலங்கை மீதான ஆர்வத்தை மறைமுகமாக ஆதரித்து நின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. வன்னி மீதான படையெடுப்பில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிற மகிந்தாவின் வார்த்தைகளை கருணாநிதி நம்பித் தொலைக்கிறாரோ என்னவோ?
ஈழம் பற்றி தமிழகத்தில் பேசுவதை எல்லாம் புலிகள் பற்றிய பேச்சாக மாற்றுவதன் மூலம் கருணாநிதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. காங்கிரசாரை திருப்திப்படுத்துவதன் மூலம் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்கிற கருணாநிதி இந்தச் சீரழிவுகளுக்கு இறுதியில் வந்து சேர்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு பக்கம் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசிக் கொல்கிற காட்சிகள் நம் தூக்கத்தைக் குலைக்கிற அதே வேளையில் போரில் இறந்த பெண் புலிகளின் உடலை பாலியல் ரீதியில் வன்முறை செய்கிறதைப் பற்றி என்ன சொல்ல? உயிரற்ற உடலைக் கூட வெறி கொண்டு நோக்கும் போது நாம் அந்த பெண்ணுடல்களின் பால் மீறப்பட்ட பாலியல் உரிமை குறித்து மௌனம் சாதிக்கத்தான் வேண்டுமா? அவர்களை புலிகளாகப் பார்ப்பதா ஈழத் தமிழ் பெண்களாகப் பார்ப்பதா? என்கிற கேள்விகளை எல்லாம் கருணாநிதியிடம் அல்ல சோனியா காந்தியிடமும் ப்ரியங்காவிடமுமே நாம் கேட்க வேண்டும். மற்றபடி கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு பெருங்கவலைகள் கொள்ள ஏதும் இல்லை. போரில் இவ்விதமான நடவடிக்கைகளை, இழப்புகளை, துரோகங்களை புலிகள் முன்னரும் சந்தித்திருக்கிறார்கள்.
கடைசியாய் ஒரு சிறு குறிப்பு
கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் ராஜிநாமா நாடகங்கள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவர்களும் மத்திய அரசும் சேர்ந்து ஈழ விவகாரத்தில் துரோக நாடகங்களைத் தொடருவார்களோ என்று தோன்றுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை இலங்கைக்குப் போகச் சொல்லிக் கேட்டது, அதை வேண்டுமென்றே தாமதப்படுத்தி இழுத்தடித்தது, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் வசம் விழுந்த அன்று ராமதாஸ் இந்திய பிரதமருக்கு பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கடிதம் எழுதியது என இதெல்லாம் இவர்கள் கூட்டு சேர்ந்தே செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இனி பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போவார். இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று சொல்வார். இலங்கையும் போரை நிறுத்தி விட்டதாக அறிவிக்கும். நாடகங்கள் வழமைபோல தொடர்ந்து கொண்டிருக்கும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்துக்காக திரண்ட தமிழகத்தின் எழுச்சியை இவர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீர் விட்டு அணைக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் தணல் தண்ணீராலோ கண்ணீர்த் துளிகளாலோ அணையக் கூடியதல்ல.அது சாம்பல் மூடிய நெருப்பு, என்றாவாது எரிந்தே தீரும்...